செச்சினிய நாடாளுமன்றம் தாக்குதலுக்கு உள்ளானது

செவ்வாய், அக்டோபர் 19, 2010

உருசியக் குடியரசான செச்சினியாவின் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


செச்சினியா

செச்சினியாவின் தலைநகர் குரொச்னியில் தீவிரவாதிகள் நாடாளுமன்றத்தைத் தாக்கியதில் இரண்டு பாதுகாப்புப் படையினரும், பணியாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் மூரும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர். இவர்களில் இருவர் தற்கொலைக் குண்டுதாரிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.


தீவிரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும், தக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டார்கள் என செச்சினிய அரசுத் தலைவர் ரம்சான் காதிரொவ் தெரிவித்தார். காலை 0845 மணிக்கு இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், கட்டிடக் காவல் நிலையமே தாக்குதலுக்கு இலக்கானதாகவும் காதிரொவ் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தினுள் இருந்த அனைத்து உறுப்பினர்களும் காயம் எதுவும் இன்றி வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். குறைந்தது 10 பேர் காயமடைந்ததாக உருசிய செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செச்சினியா, மற்றும் அயல் மாநிலங்களான தாகெஸ்தான், இங்குசேத்தியா ஆகியவற்றில் தனிநாடு கோரி இசுலாமியத் தீவிரவாதிகள் போரிட்டு வருகிறார்கள்.


மூலம்