செச்சினிய அதிபர் மாளிகை மீது போராளிகள் தாக்குதல்

திங்கள், ஆகத்து 30, 2010

செச்சினியாவின் அதிபர் மாளிகை மீது அரசு-எதிர்ப்புப் போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து இடம்பெற்ற மோதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ரம்சான் காதிரொவ், செச்சினிய அதிபர்

வடக்கு கவ்க்காஸ் பகுதியில் அதிபர் ரம்சான் காதிரொவின் இல்லத்தின் மீது ஞயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 12 போராளிகளும் இரண்டு பாதுகாப்புப் படைப் பிரிவினரும் கொல்லப்பட்டனர். இடையில் அகப்பட்ட ஐந்து பொதுமக்களும் இதன் போது கொல்லப்பட்டதாக அரசுப் பேச்சாளர் ஆல்வி கரீமொவ் தெரிவித்தார். சுமார் 60 போராளிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்திற்கும் மேற்பட்ட வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டன.


தாக்குதலின் போது அதிபர் காதிரொவ் அவரது இல்லத்தில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் இறந்ததை அவர் நிராகரித்திருக்கிறார். பொதுமக்கள் சிலர் காயப்பட்டதாகவும் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.


இரசியாவில் இருந்து பிரிவினை கோரும் செச்சினியப் போராளிகள் அங்கு பல தாக்குதல்களை தினமும் நடத்தி வருவதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


1990களில் இரசியாவுக்குஎதிரான போரில் போராளிகளின் சார்பாக போரில் பங்குபற்றிய காதிரொவ், பின்னர் 1999 ஆம் ஆண்டில் அரசுக்குச் சார்பாளராக மாறினார். 2007 ஆம் ஆண்டில் அவர் செச்சினியாவின் அதிபராக மொஸ்கோவின் நடுவண் அரசினால் நியமிக்கப்பட்டார். அன்றில் இருந்து காதிரொவைப் படுகொலை செய்யப் பல முயற்சிகள் போராளிகளால் மேற்கொள்ளப்பட்டன.

மூலம் தொகு