சூரிய ஆற்றலில் 26 மணி நேரம் பறந்து சாதனை படைத்தது விமானம்
வெள்ளி, சூலை 9, 2010
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 23 பெப்பிரவரி 2017: பூமியின் அளவை ஒத்த ஏழு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு
- 15 பெப்பிரவரி 2017: இந்தியா 104 செயற்கை கோள்களை ஒரே சமயத்தில் ஏவியது
- 14 சனவரி 2017: இசுபேசு-எக்சு 10 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியது
- 26 திசம்பர் 2016: இந்தியா அக்னி-5 வகை ஏவுகணையை நான்காவது முறையாக வெற்றிகரமாக சோதித்தது
"சூரியத் தூண்டல்" என அழைக்கப்படும் சூரிய ஆற்றலில் இயங்கும் விமானம் ஒன்று 26 மணி நேர வெற்றிகரமான சோதனைப் பறப்பின் பின்னர் நேற்று வியாழக்கிழமை திட்டமிட்டபடி சுவிட்சர்லந்தில் தரையிறங்கியது. பகலில் சேமிக்கப்பட்ட சூரிய ஆற்றலை இவ்விமானத்தின் இரவு நேரப் பறப்புக்கும் பயன்படுத்த மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி இதன் மூலம் வெற்றி கண்டுள்ளது.
"தேவையான அளவு சூரிய ஆற்றல் இவ்விமானத்தில் இருக்குமிடத்து இது எவ்வளவு தூரமும் பறக்கக்கூடியதாக இருக்கும் என கொள்கையளவில் ஏற்றுக் கொள்ளலாம்," என இதனை வடிவமைத்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இவ்விமானம் காலை 0900 (0700 GMT) மணிக்கு சுவிஸ் தலைநகர் பேர்னில் இருந்து 50 கிமீ தூரத்தில் உள்ள பேயேர்ன் விமானநிலையத்தில் தரையிறங்கியது. சராசரியாக 25 மைல்/மணி வேகத்தில் 8,700 மீட்டர் உயரம் இவ்விமானம் இச்சோதனைப் பறப்பில் பறந்துள்ளது. விமானி மூலம் இயக்கப்பட்ட சூரிய ஆற்றலுடன் கூடிய விமானம் ஒன்று இவ்வளவு உயரம் பறந்ததும் இதுவே முதற் தடவையாகும்.
தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது. | ||
—பேர்ட்ரான்ட் பிக்கார்ட், சூரியத் தூண்டல் |
சுவிஸ் விமானப் படையின் முன்னாள் போர் விமானியான அந்திரே போர்சுபேர்க் என்பவரே இவ்விமானத்தை ஓட்டிச் சென்றார். "40 ஆண்டுகளாக நான் விமானியாகப் பணியாற்றுகிறேன். இந்த சோதனைப் பறப்பில் கலந்து கொண்டது எனது பணிக்காலத்தில் நான் பெற்ற அதிஉயர் சாதனையாக நான் கருதுகிறேன். மின்கலங்களில் ஆற்றல் அதிகரிப்பதை நான் அவதானித்துக் கொண்டிருந்தேன். சுர்ரியனுக்கு நான் நன்றி சொல்கிறேன். எரிபொருள் எதுவுமின்றி, சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் 26 மணி நேரம் நான் வானில் பறந்திருக்கிறேன்," என்றார் அந்திரே போர்சுபேர்க்.
இவ்விமானம் ஒரு பயணியை மட்டும் ஏற்றிச் செல்ல வல்லது. இதன் இறக்கைகளின் மேல் பக்கம் முழுக்க 12,000 சூரியக் கலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கரிம இழைகளால் ஆன இந்த விமானத்தின் எடை ஒரு மோட்டார் வண்டியின் எடையே ஆயினும், இதனுடைய இறக்கைகள் அறுபது மீட்டர்கள் நீளமுடையவை. இந்த விமானம் செல்லக்கூடிய அதிகபட்ச வேகம் மணிக்கு 70 கிமீ.
எனினும், இப்பயணத்தின் போது சில பின்னடைவுகளையும் சந்திக்க நேர்ந்துள்ளது. "17 மணி நேரப் பயணத்தின் பின்னர் சில பிரச்சினைகளை அந்திரே எதிர்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தனக்கு முதுகுவலி ஏற்பட்டதாகவும், விமானி அறையில் மிகவும் குளிராக (-20 பாகை செல்சியசு) இருந்ததாகவும் குறைப்பட்டுக் கொண்டார். குடிநீர் இதனால் உறைந்து விட்டதாகவும், அவரது ஐ-பொட் இயங்க மறுத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது."
"தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மீளப்பயன்படுத்தப்படக்கூடிய எரிசக்தி ஆகியவற்றுக்கான சாத்தியத்தை இவ்விமானத்தின் வெற்றிகரமான பறப்பு விளக்குகிறது," என சூரியத் தூண்டல் (solar impulse) என்ற இத்திட்டத்தின் தலைவரான பேர்ட்ரான்ட் பிக்கார்ட் தெரிவித்துள்ளார். இவர் 1999 ஆம் ஆண்டு வளிமக்கூடு மூலம் முதல் தடவையாக உலகத்தைச் சுற்றி வந்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்
தொகு- Solar-powered plane lands safely after 26-hour flight, பிபிசி, ஜூலை 8, 2010
- Success: Solar plane finishes 24-hour flight, NECN, ஜூலை 8, 2010
- Solar-Powered Plane Flies for 26 Hours, நியூயோர்ர்க் டைம்ஸ், ஜூலை 8, 2010
- சூரிய சக்தியில் இரவுநேரத்தில் பறந்த முதலாவது விமானம், தமிழ்மிரர், ஜூலை 9, 2010