சீனா தனது முதலாவது பயணிகள் உலங்கு வானூர்தியை வெள்ளோட்டம் விட்டது

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

வெள்ளி, மார்ச்சு 19, 2010


சீனா முழுவதுமாக உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்ட பெரியரகப் பயணிகள் உலங்கு வானூர்தியை (Helicopter) கிழக்கு மாகாணமான சியாங்சியில் சிங்டேசன் என்ற இடத்தில் நேற்று வியாழக்கிழமையன்று வெற்றிகரமாகப் பறக்க விட்டது.


ஏவிக் என்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனம் ஏசி313 என்ற இந்த பார உலங்குவானூர்தியைத் தாயாரித்திருந்தது. இது 13.8 தொன்கள் எடையை அல்லது 27 பயணிகளை ஏற்றிச் செல்ல வல்லது.


இது நிலநடுக்கம், சூறாவளி, மற்றும் இயற்கை அழிவுகளின் போது மீட்புப் பணிகளுக்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வான்வெளி தொழில்நுட்பத்தில் இது ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது.


அதன் செயல்திறன், உலகின் 3வது தலைமுறை உலங்குவானூர்தி நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பா, அமெரிக்கா, இரசியா ஆகியவற்றுக்குப் பின் சீனா பெரியரக உலங்குவானூர்தியைத் தற்சார்பாக வடிவமைத்து தயாரிக்கின்ற திறனைப் பெற்றுள்ளது என சீன வானொலி அறிவித்துள்ளது. ஏசி313 என்ற இந்த உலங்கு வானூர்தி 900 கிமீ தூரம் செல்லவல்லது என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இதன் முதற்பயண நிகழ்வு சீனத் தொலைக்கட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.


சென்ற மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற வான் பொருட்காட்சியில் சீனா கோமாக் சி919 (Comac C919) என்ற தனது வானூர்தி ஒன்றைக் காட்சிப்படுத்தியிருந்தது. இது போயிங் 737 மற்றும் வான்பேருந்து ஏ320 இற்கு இணையானது ஆகும். இதனை 2016 ஆம் ஆண்டளவில் விற்பனைக்கு சீனா விட இருக்கிறது.

மூலம்

தொகு