சீனா ஒரு பெண் உட்பட மூவரை விண்வெளிக்கு அனுப்பியது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சூன் 17, 2012

சீனா விண்வெளிக்கு பெண் ஒருவரை முதற்தடவையாக அனுப்பியுள்ளது.


நேற்று சனிக்கிழமை 3 விண்வெளி வீரர்களுடன் சென்சோ 9 என்ற விண்கலம் கோபி பாலைவனப் பகுதியில் இருந்து உள்ளூர் நேரம் மாலை 18:37 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. புறப்பட்டு எட்டு நிமிட நேரத்தில் திட்டமிட்ட சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது.


லியு யங் என்ற பெண்ணுடன் மேலும் இரு ஆண்களும் தியேன்குங்-1 எனும் சீனாவின் விண்வெளி ஆய்வுக் கலத்துடன் திங்கள் அன்று மாலையில் இணைவர். ஒரு வாரம் வரை 335 கிமீ உயரத்தில் நிலைகொண்டுள்ள விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் மூவரும், அங்கு பல அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வர்.


ஒரு குழந்தையின் தாயான 33 வயதான லியு யங், சீன விமானப்படையில் மேஜர் தர அதிகாரியாவார். போக்குவரத்து விமானத்தின் விமானியாக செயற்பட்ட அவர், பல பறவைகள் விமானத்தில் மோதி அதன் ஒரு இயந்திரம் செயற்பாட்டை இழந்த தருணத்திலும், கூட அதனால் ஏற்பட்ட அழுத்தங்களை மிகவும் லாவகமாக கையாண்டவர். கைப்பந்து வீராங்கனையான இவர், இரு ஆண்டுகளுக்கு முன்னர்தான் சீன விண்வெளித்திட்டத்தில் இணைந்தார்.


சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் குழுவின் தலைவர் வூ பாங் கோ சனிக்கிழமை பிற்பகல் சியூச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்தில் விண்வெளி வீரர்களை வழியனுப்பினார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவரும் சீன மத்திய இராணுவக் கமிட்டியின் தலைவருமான ஹு சிந்தாவ் விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.


சென்சோ 7 விண்கலத்தில் 2008 ஆம் ஆண்டில் சென்று திரும்பிய சிங் ஹாய்ப்பெங், 46, இரண்டாவது தடவையாக இப்போது விண்வெளிக்குச் செல்கிறார். ஏனையோர் இருவரும் முதற்தடவையாக விண்வெளிக்குச் செல்கின்றனர்.


சீனா தனது விண்வெளித்திட்டத்திற்கு பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. ஏற்கனவே இரு செயற்கைக்கோள்களை சந்திரனின் சுற்றுவட்டத்திற்கு அனுப்பியுள்ளது. அடுத்த தடவை நிலவில் விண்ணுளவி ஒன்றைத் தரையிறக்க எண்ணியுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு