சீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம்

வியாழன், ஏப்பிரல் 29, 2010


சீனாவின் கிழக்குப் பகுதியில் சிறுவர் ஆரம்பப்பள்ளி ஒன்றில் நபர் ஒருவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி 28 குழந்தைகளும், 3 பெரியவர்களும் படுகாயம் அடைந்தனர். இம்மாதத்தில் இடம்பெற்ற இதே மாதிரியான மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.


சியாங்கு மாகாணத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் 5 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


சென்ற புதன்கிழமை நாட்டின் தென்பகுதியில் நடந்த இதே மாதிரியான தாக்குதலில் 16 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர். சென்ற மாதம் பூச்சியான் மாகாணத்தில் 8 சிறுவர்களைச் சுட்டுக் கொன்ற மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் தூக்கிலிடப்பட்டார்.


இன்றைய தாக்குதலை நடத்தியது சூ யூயுவான் என்ற 47 வயது வேலையற்ற நபர் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.


டாய்சிங் என்ற நகரில் ஆரம்பப்பள்ளி ஒன்றில் நுழைந்த இம்மனிதன் அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாகக் கத்தியால் குத்திக் காயப்படுத்தியதாகவும் அவனைத் தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரியையும் அவன் குத்திக் காயப்படுத்தியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த அனைத்துக் குழந்தைகளும் 4 முதல் 5 வயதானவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக பள்ளிகளில் தாக்குதல் நடத்தப்படுவது அதிகமாகியுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான தாக்குதல்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், மனநோய் பாதிக்கப்பட்டவர்களாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மூலம்