சீனாவின் புதிய தலைவராக சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டார்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், நவம்பர் 15, 2012

அடுத்த பத்தாண்டுகளுக்கு சீனாவை வழிநடத்தும் புதிய தலைவராக சீ சின்பிங் தேர்தெடுக்கப்பட்டார்.


சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் 18வது தேசிய மாநாடு நேற்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நிறைவடைந்தது. இதனை அடுத்து இன்று இடம்பெற்ற சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது மத்தியக் குழுவின் முதல் முழு அமர்வில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீ ச்சின்பிங் தோன்றி உரையாற்றினார்.


உலகத்தைச் சீனா மேலும் புரிந்து கொள்ள வேண்டும். அதே வேளையில், சீனாவை உலகம் மேலும் புரிந்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில், சீனாவுக்கும் உலகத்துக்குமிடையிலான புரிந்துணர்வை அதிகரிப்பதற்குச் செய்தியாளர்கள் பங்காற்ற வேண்டுமென செய்தியாளர்களைச் சந்தித்த போது சீ சின்பிங் தெரிவித்தார்.


இவருக்கு முன்னர் தலைவராக இருந்த கூ சிந்தாவுவின் பதவிக் காலத்தில் சீனா தனது பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டிருந்ததாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். புதிய தலைவர்கள் அடுத்த சில மாதங்களில் தமது புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வர் எனத் தெரிகிறது. 2013 மார்ச் மாதத்தில் கூ சிந்தாவுவின் பதவிக்காலம் முடிவடைகிறது.


சீ சின்பிங், லீ கெச்சியங், சாங் தெஜியங், யூ ச்சங்சங், லியூ யுன்சென், வாங் சிசென், சாங் காவ்லி ஆகியோர், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். நிரந்தர உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதிலிருந்து ஏழாகக் குறைக்கப்பட்டுள்ளது.


மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவராகவும் சீ சின்பிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சங்காய் நகர முன்னாள் கட்சித் தலைவரான சீ சின்பிங் (அகவை 59) 2007 ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்டுக் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.


மூலம்

தொகு