சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் தீவிபத்து, 30 இற்கும் அதிகமானோர் உயிரிழப்பு

புதன், செப்டெம்பர் 5, 2012

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டனர், 70 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.


பட்டாசுத் தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி நகரில் உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் ஓம்சக்தி பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று மதியம் 12 மணியளவில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் பட்டாசுத் தயாரிப்பு மிக மும்முரமாக இங்கு நடைபெற்று வந்தது. தொழிற்சாலைக்கு மேலே பெரும் நெருப்புப் புகை படர்ந்ததை தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்பட்டது. இறந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


நாட்டின் 90 விழுக்காடு பட்டாசுத் தேவைகள் சிவகாசியிலேயே தயாரிக்கப்படுகின்றன. ஏனைய ஆசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வெடிவிபத்துக்கு காரணம் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை, ஆயினும் தமிழ்நாட்டில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் இவ்வாறான விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.


சிவகாசி சென்னையில் இருந்து தென்மேற்கே 650 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.


மூலம் தொகு