சிபூட்டி உணவகத்தில் கிரனைட்டுத் தாக்குதல், இருவர் உயிரிழப்பு
சனி, மே 24, 2014
ஆப்பிரிக்காவின் சிபூட்டி நாட்டில் வெளிநாட்டினர் பெருமளவு பயன்படுத்தும் உணவகம் ஒன்றின் மீது இனந்தெரியாதோர் நடத்திய கிரனைட்டுத் தாக்குதலில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.
சிபூட்டி தலைநகரில் உள்ள லா சாமியேர் என்ற உணவகத்தின் மீதே கிரனைட்டுகள் எறியப்பட்டன. குறைந்தது 11 பேர் காயமடைந்தனர்.
உணவகத்தின் இரு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர். எக்குழுவும் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை.
உள்ளூர் நேரம் இரவு 8 மணியளவில் பல குண்டுச் சத்தங்கள் கேட்டது, அதன் பின்னர் அப்பகுதி உடனடியாக காவல்துறையினரால் மூடப்பட்டது.
முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடான சிபூட்டியில் அமெரிக்க, மற்றும் பிரெஞ்சு இராணுவத் தளங்கள் அமைந்துள்ளன. அயல்நாடான சோமாலியாவில் போரிடும் அல்-சபாப் இயக்கப் போராளிகளுக்கு எதிரான ஆப்பிரிக்க ஒன்றியப் படையினரின் நடவடிக்கைகளுக்கு இதுவே முக்கியத் தளமாக உள்ளது. ஏடன் குடாவினூடாகச் செல்லும் கப்பல்களை சோமாலியக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்க வெளிநாட்டுக் கடற்படையினருக்கு இந்நாட்டில் உள்ள துறைமுகமே பயன்படுத்தப்படுகிறது.
மூலம்
தொகு- Deadly attack on Djibouti restaurant, பிபிசி, மே 24, 2014
- Grenade attack rocks Djibouti cafe, அல்ஜசீரா, மே 24, 2014