சமோவா, டோக்கெலாவ் 2012 புத்தாண்டைக் கொண்டாடிய முதல் நாடுகள்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, சனவரி 1, 2012

2011 ஆம் ஆண்டு நிறைவையும், 2012 புத்தாண்டையும் உலகின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் இன்று கொண்டாடி வருகிறார்கள். பசிபிக் தீவு நாடுகளான சமோவா, டோக்கெலாவ் ஆகியன புத்தாண்டு ஒன்றை முதற்தடவையாக உலகின் ஏனைய நாடுகளை விட முதலாவதாகக் கொண்டாடி மகிழ்ந்தன.


சிட்னியில் ஒப்பேரா மாளிகையில் புத்தாண்டு நிகழ்வு (2006)
புத்தாண்டு கொண்டாட்டத்தை எதிர்த்து மலேசிய பாஸ் கட்சியினர் மெர்டேகா சதுக்கத்தில் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

சமோவா டோக்கெலாவ் இரண்டும் 2011 திசம்பர் 29 இல் தமது நாட்காட்டியை ஒரு நாள் முன்னதாக மாற்றியிருந்தது. இதன் படி அவர்கள் 2011 திசம்பர் 30 என்ற ஒரு நாளை முழுமையாக இழந்து 2011 திசம்பர் 31 இற்கு நேரடியாகச் சென்றிருக்கிறார்கள். பன்னாட்டு நாள் கோட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த இந்த நாடுகள் இனிமேல் அதன் மேற்குப் பகுதியில் இருக்கும்.


உள்ளூர் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் நேற்று சனிக்கிழமை முழுவதும் புதிய ஆண்டை உலகில் முதன் முதலாகக் கொண்டாடும் மக்கள் என்ற வகையில் பல்வேறு களியாட்ட நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருந்தனர். வழமையாக இவர்களே உலகில் கடைசியாகப் புத்தாண்டு ஒன்றைக் கொண்டாடுபவர்களாக இருந்து வந்துள்ளனர்.


ஆத்திரேலியாவின் சிட்னி மாநகர மக்கள் வழமை போல தமது புத்தாண்டை உள்ளூர் நேரம் நள்ளிரவு 12:00 (ஜிஎம்டி நேரம் திசம்பர் 31, 13:00) மணிக்கு பல கோடி டாலர்கள் செலவில் சிட்னி ஒப்பேரா மாளிகையில் வாண வேடிக்கைகளுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.


துபாயில் உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உச்சத்தட்டில் வாண வேடிக்கைகள் இடம்பெற்றன.


ஐரோப்பாவில் பல நாடுகளிலும் தற்போது புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. மாஸ்கோவில் பல்லாயிரக்கணக்கானோர் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக செஞ்சதுக்கத்தில் கூடியுள்ளனர். ஆனாலும் அங்கு மதுபானம் விற்பனை இன்று தடை செய்யப்பட்டுள்ளது.


மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள விடுதலை சதுக்கத்தில் (மெர்டேகா) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மலேசிய செய்தித்துறை அமைச்சர் கலந்துகொண்டார். மெர்டேகா சதுக்கத்தில் வாணவேடிக்கை முடிந்தவுடன் பாஸ் கட்சியினர் புத்தாண்டு கொண்டாட்டங்களை எதிர்த்து திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு