சப்பான்: 500 கிமீ/மணி வேகத்தில் செல்லும் அதிவிரைவு தொடருந்து சோதனை ஓட்டம் வெற்றி

வெள்ளி, சூன் 7, 2013

சப்பானில் மணிக்கு 500 கிமீ வேகத்தில் செல்லும் அதிவிரைவு புல்லட் தொடருந்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. சப்பானில் சக்கரம் இல்லாத காந்த சக்தியில் இயங்கும் அதிவிரைவு புல்லட் ரயில் தயாரிக்கப்பட்டு உள்ளது.


மாக்லெவ் ரக சின்கான்சென் புல்லெட் ரயில் சோதனை ஓட்டம் (2005)

இதன் தயாரிப்புப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, இதன் சோதனை ஓட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த அதி விரைவு ரயில் சப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து புறப்பட்டு நாகோயா நகருக்கு வெற்றிகரமாகச் சென்றடைந்தது.


சுமார் 64 பில்லியன் டாலர் செலவில் வடிவமைக்கப்பட்ட இந்த புல்லட் ரயிலை சப்பான் தொழில் நுட்ப வல்லுனர் வடிவமைத்துள்ளனர். மாக்லெவ் (Maglev) என அழைக்கப்படும் இவ்வகையான மிதக்கும் தொடருந்து சேவை டோக்கியோவிற்கும் நகோயாவிற்கும் இடையில் 2027 ஆம் ஆண்டில் சேவைக்கு விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காந்தத்தால் மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் சக்கரங்களின் உதவியில்லாமல் மிதந்து கொண்டே செல்லக்கூடியவை இந்த புல்லெட் தொடருந்து. 500 கிமீ வேகத்தில் செல்லும் இத்தொடருந்து இரண்டு நகரையும் 40 நிமிடங்களில் இணைக்கும். ஆரம்பத்தில் 4 பெட்டிகளுடன் சேவையை ஆரம்பிக்கும். பின்னர் இது 16 பெட்டிகளுடன் 1,000 பயணிகளைக் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது. 2045 ஆம் ஆண்டில் ஒசாக்கா நகருக்கு சேவைக்கு விடப்படும் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. டோக்கியோவில் இருந்து ஒசாக்காவிற்கு 67 நிமிடங்களில் பயணம் செய்ய முடியும்.


இவ்வகையான மாக்லெவ் தொழில்நுட்ப ரயில்களை முதன் முதலாக சப்பானே 1964 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை ஒட்டி சேவைக்கு விட்டிருந்தது. சின்கான்சென் என இந்த முதலாவது புலட் தொடருந்து அழைக்கப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது சின்கான்சென் எல்0 (L0 Series Shinkansen) தொடர் ஆகும்.


இந்தியாவில் இவ்வகையான தொடருந்து சேவைகளை அறிமுகப்படுத்த சப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், சப்பானியப் பிரதமர் சின்சோ அபே இற்கும் இடையே கடந்த மாதம் கையெழுத்தானது.

மூலம் தொகு