சப்பானில் 8.9 அளவு நிலநடுக்கம், ஆழிப்பேரலை, பலர் உயிரிழப்பு

This is the stable version, checked on 8 சூன் 2020. Template changes await review.

வெள்ளி, மார்ச்சு 11, 2011

சப்பானின் வட கிழக்குப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ரிக்டர் அளவுகோளில் 8.9 புள்ளிகளாகப் பெரும் நிலநடுக்கம் பதிவானது. சப்பானின் ஒன்சூ தீவில் செண்டை நகரில் இருந்து 130 கிமீ கிழக்கே மையம் கொண்டிருந்த இந்நடுக்கம் 24.4 கிமீ ஆழத்தில் உருவானது.


டோக்கியோவில் இன்றைய நிலநடுக்கத்தின் தாக்கம்
ஆழிப்பேரலைத் தாக்கத்தின் எதிர்வுகூறல்

இந்த நிலநடுக்கத்தையடுத்து மியாகி கடலோரப் பகுதி உள்பட ஜப்பானின் பெரும்பாலான கடலோரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலைகள் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலைகள் காரணமாக இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நிலநடுக்கத்தை பெரும்பாலான கடலோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர். அடுத்த சில மணி நேரங்களில் 13 அடி உயரமுள்ள மிக பயங்கர அலைகள் கடலோரப் பகுதிகளில் புகுந்தன. ஆழிப்பேரலைக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்துள்ளதுடன் வாகனங்களும் அலைகளில் அடித்துச் சென்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


தலைநகர் டோக்கியோவில் கிட்டத்தட்ட 4 மில்லியன் மக்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளனர். உணவு விடிதி ஒன்று இடிந்து வீழ்ந்ததில் பலர் இடிபாடுகளிடையே சிக்குண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சப்பானைத் தொடர்ந்து ரஷ்யா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, ஹவாய் தீவுகள், தைவான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வடக்கு மரியானாஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்திய கடலோரப் பகுதிகளை ஆழிப்பேரலை தாக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்

தொகு
 
விக்கிப்பீடியா
விக்கிப்பீடியாவில் இத்தலைப்புக் குறித்து மேலும் கட்டுரைகள் உள்ளன:
 
விக்கியூடக நடுவம்
2011 செண்டாய் நிலநடுக்கம் தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .