சதுரங்க வீரர் பாபி பிஷரின் உடல் தோண்டி எடுக்கப்பட இருக்கிறது

வெள்ளி, சூன் 18, 2010

சொத்துரிமை தொடர்பாக முன்னாள் அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் பாபி ஃபிஷரின் உடல் தோண்டி எடுக்கப்பட ஐஸ்லாந்தின் நீதிமன்றம் ஒன்று அனுமதி அளித்துள்ளது.


1960இல் பாபி ஃபிஷர்
பாபி ஃபிஷர் அடக்கம் செய்யப்பட்ட இடம்

9 வயது ஜிங்கி யங் என்பவர் ஃபிஷரின் மகள் தான என்று அறிய அவரது உடலின் திசுப்பகுதி தேவையாயுள்ளது என ரெய்க்சாவிக் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


2008 ஆம் ஆண்டு ஐஸ்லாந்தில் காலமான பாபி ஃபிஷர் இறக்கும் போது எவ்வித மரண சாசனத்தையும் எழுதி வைக்கவில்லை.


இவரது சொத்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இச்சொத்துக்கு அவரது முன்னாள் மனைவி, உறவினர்கள் மட்டுமல்லாமல் அமெரிக்க அரசும் உரிமை கோரியுள்ளது. ஃபிஷரின் வருமான வரி இன்னும் நிலுவையில் உள்ளதாக அமெரிக்க அரசு கூறுகிறது.


ஃபிஷருடன் தொடர்பு வைத்திருந்த பிலிப்பீனியப் பெண் மாரிலின் யங் என்பவரின் மகள் ஜிங்கி ஆவார்.


ஃபிஷர் இறக்கும் வரை ஜிங்கிக்கு பணம் அனுப்பி வந்திருப்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாக ஜிங்கிக்காக வாதாடும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.


அமெரிக்காவில் 1943 இல் பிறந்த பாபி ஃபிஷர் இறக்கும்போது ஐஸ்லாந்தின் குடிமகனாக இருந்தார். அதிகாரபூர்வ உலக சதுரங்க வீரர் என்ற பட்டத்தைப் பெற்ற ஒரேயொரு அமெரிக்கர் இவராவார். 1972 இல் உலக சம்பியனான போரிஸ் ஸ்பாஸ்கியை வென்று இப்பட்டத்தைப் பெற்றார். 1975 இல் இடம்பெற்ற உலக சம்பியன் போட்டியில் இவர் இட்ட நிபந்தனைகளை பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) ஏற்க மறுத்ததால் ஃபிஷர் இப்போட்டிகளில் பங்குபற்ற மறுத்து விட்டார். இதனால் இவரது சம்பியன் பட்டமும் பறிபோனது.


1992 இல் ஸ்பாஸ்கியுடன் சதுரங்க போட்டி ஒன்றில் கலந்து கொள்ள யூகொஸ்லாவியா சென்றார். யூகொஸ்லாவியா மீது ஐநா தடை விதித்திருந்தது காரணமாக இவர் மீண்டும் தனது நாட்டுக்கு திரும்ப முடியவில்லை. பிஷருக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் இதனால் முறுகல் நிலை ஏற்பட்டது. ஹங்கேரியில் சிறிது காலம் வாழ்ந்த பிஷர் பின்னர் ஜப்பான் சென்றார். அங்கு அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு 9 மாதங்கள் 2004-2005 இல் தடுப்புக்காவலில் இருந்தார். 2005 இல் ஐஸ்லாந்து குடியுரிமை பெற்று இறக்கும் வரையில் அங்கு வசித்து வந்தார். இவரது தாயார் ஒரு யூதர் ஆவார்.

மூலம்

தொகு