கொங்கோ மக்களாட்சிக் குடியரசு: ஆப்பிரிக்கத் தலைவர்களுக்கிடையே அமைதி உடன்பாடு எட்டப்பட்டது

ஞாயிறு, பெப்பிரவரி 24, 2013

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அமைதியைக் கொண்டு வரும் முகமாக ஐக்கிய நாடுகளின் ஆதரவில் அமைதி உடன்பாடு ஒன்று ஆப்பிரிக்கத் தலவர்களிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது.


ஐநா பொதுச் செயலர் பான் கி மூனின் தலைமையில் எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் இந்த அமைதி உடன்பாடு கையெழுத்தானது. இவ்வுடன்பாட்டின் மூலம் பிராந்தியத்தில் அமைதியும் திரத்தன்மையும் ஏற்படும் என பான் கி மூன் நம்பிக்கை தெரிவித்தார்.


கடந்த மே மாதத்தில் சின்சாசா அரசுக்கு எதிராக மார்ச் 23 போராளிக் குழு (எம்23) ஆயுதமேந்திப் போராடத் தொடங்கியதில் இருந்து கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் 800,000 இற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.


மொசாம்பிக், ருவாண்டா, தன்சானியா, தென்னாப்பிரிக்கா, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, தெற்கு சூடான் ஆகிய 11 நாடுகளின் தலைவர்கள் இந்த அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வுடன்படிக்கையின் படி, கிழக்குக் கொங்கோவில் ஐநாவின் சிறப்புப் படையொன்று நிலை கொண்டிருக்கும். அத்துடன் நாட்டில் அமைதியைக் கொண்டு வரும் பொருட்டு அரசியல் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவிருக்கின்றன.


கொங்கோ சனநாயகக் குடியரசின் கிழக்குப் பிராந்தியத்தில் மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் என எம்23 போராளிக் குழு போராடி வருகிறது.


மூலம் தொகு