கொங்கோவின் மனித உரிமை அமைப்பின் தலைவர் மர்மமான முறையில் இறப்பு

வியாழன், சூன் 3, 2010

கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் பிரபலமான மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தலைநகர் கின்சாசாவில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.


புளோரிபர்ட் செபாயா என்பவரது உடல் நேற்று புதன்கிழமை இரவு அவரது வாகனத்தில் கிடக்கக் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


திரு. செபாயாவை காவல்துறையினர் அடிக்கடி அச்சுறுத்தியதாகவும், செவ்வாய்க்கிழமை அன்று அவர் தேசிய காவல்துறை தலைமை அதிகாரியைச் சந்திக்க அழைக்கப்பட்டிருந்தார் எனவும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். இந்தச் சந்திப்பு இடம்பெற்றதா என்பதை அறிய முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.


இறப்பதற்கு முன்னர் செபாயா தனது மனைவிக்கு ஒரு குறுந்தகவல் அனுப்பியிருந்தார். தான் காவல்துறை தலைமையகத்தில் கூட்டம் ஒன்றில் இருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குப் பின்னர் அவரிடம் இருந்து எவ்விதத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என செய்தியாளர் தெரிவிக்கிறார்.


குரல்கொடுக்க முடியாதோரின் குரல் என்ற மனித உரிமை அமைப்பின் தலைவராக செபாயா இருந்தவர். 1990களில் இருந்து அவர் கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் மக்களாட்சிக்கும், மனித உரிமைக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்து வந்தவர்.


"இப்படியான ஒரு பிரபலமான மனித உரிமை ஆர்வலர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தது எமக்கு அதிர்ச்சியைத் தருகிறது," என பன்னாட்டு மன்னிப்புச் சபையின் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான பிரதித் தலைவர் வெரோனிக் ஓபர்ட் தெரிவித்தார். பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அவ்வமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

மூலம் தொகு