கொங்கோவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஒன்றைப் போராளிகள் கைப்பற்றினர்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

திங்கள், சூலை 9, 2012

கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்கே கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ருத்சூரு என்ற நகரை போராளிகள் கைப்பற்றியிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசுப் படைகள் அங்கிருந்து பின்வாங்கியுள்ளன.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் ருத்சூருவின் அமைவிடம்

கடந்த வெள்ளியன்று உகாண்டா எல்லையில் அமைந்திருந்த புனாகனா என்ற நகரை எம்23 போராளிகள் கைப்பற்றியதை அடுத்து கொங்கோ இராணுவத்தினர் 600 பேர் வரையில் எல்லையைத் தாண்டி உகாண்டாவிற்குத் தப்பி ஓடினர். இத்தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த அமைதிகாப்புப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அறிவித்துள்ளது.


பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தினால் போர்க் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுத் தேடப்பட்டு வரும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொஸ்கோ தகாண்டா என்பவருக்கு ஆதரவான போராளிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆயுதப் போரை ஆரம்பித்தனர். ஜெனரல் தகாண்டாவின் இராணுவ சகா ஒருவர் சிறுவர்களை ஆயுதப்போருக்குச் சேர்த்ததாக பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியது. இதனால் பொஸ்கோ தகாண்டாவைக் கைது செய்வதற்கு அரசுக்கு அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து தகாண்டாவுக்கு ஆதரவான பலர் இராணுவத்தில் இருந்து வெளியேறினர்.


கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து போரில் அகப்பட்ட 200,000 பொதுமக்கள் வரை தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் 20,000 இற்கும் அதிகமானோர் அயல் நாடுகளான உகாண்டா, மற்றும் ருவாண்டா நாடுகளினுள் தஞ்சமடைந்துள்ளனர்.


போராளிகளுக்கு ஆதரவளிப்பதாக ருவாண்டா மீது அண்மையில் ஐக்கிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளது. ஜெனரல் தகாண்டா ருவாண்டாவின் அரசினரைப் போல துத்சி இனத்தவர் ஆவார். ஆனாலும், இக்குற்றச்சாட்டை ருவாண்டா கடுமையாக மறுத்துள்ளது.


கனிம-வளங்கள் நிறைந்த கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கிழக்குப் பகுதி 1994 ஆம் ஆண்டு முதல் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ருவாண்டா இனப்படுகொலையில் இருந்து தப்பி மில்லியன் துத்சி இனத்தவர்கள் எல்லை தாண்டி கொங்கோ வந்தனர். ஹூட்டு போராளிகள் கொங்கோவில் ஒளிந்திருக்கிறார்கள் எனக் காரணம் காட்டி இரண்டு தடவைகள் ருவாண்டா கொங்கோ மக்களாட்சிக் குடியரசு மீது தாக்குதல் நடத்தியுள்ளது. 1997-2003 காலப்பகுதியில் உகாண்டாவும் தமது இராணுவத்தினரை கொங்கோவுக்கு அனுப்பியது.


மூலம்

தொகு