கென்யாவில் மதகுருவின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு

There are no reviewed versions of this page, so it may not have been checked for adherence to standards.

சனி, சனவரி 16, 2010


கென்யாவில் இனவன்முறையைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைதான ஜமெய்க்காவில் பிறந்த முஸ்லிம் மதகுருவின் ஆதரவாளர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.


அப்துல்லா அல்-பைசல் என்ற மதகுருவை விடுதலை செய்யக்கோரி அவரின் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போதே காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். காவல்துறையினரின் கண்ணீர்ப் புகைக் குண்டுகளினால் நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


இம்மதகுருவின் "தீவிரவாத வரலாறு" காரணமாக கென்யா இவரை நாடு கடத்த முடிவு செய்திருந்தது. இவர் ஐக்கிய இராச்சியத்தில் யூதர்கள் மற்றும் இந்துக்கள் பலரைக் கொலை செய்வதற்குத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அங்கு அவரை நான்காண்டுகள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.


கென்யாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது 5 பேர் இறந்ததாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆனாலும் 7 பேர் வரையில் இறந்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததாக அசோசியேட்டட் பிரஸ் செய்தியாளர் தெரிவித்தார்.


முஸ்லிம் இளைஞர்கள் ஜமீயா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை முடித்தவுடன் தமது தலைநகர் நைரோபியின் மையப் பகுதியில் தமது ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்திருந்தனர். அவர்களில் சிலர் அல்-சபாப் என்ற சோமாலிய இஸ்லாமியக் குழுவின் கொடிகளைத் தாங்கியிருந்ததாக சில பத்திரிகையாளர்கள் கூறினர்.


ஜமெய்க்காவில் பிறந்த பைசல் 26 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கிருந்து வெளியேறி, ஆரம்பத்தில் ஐக்கிய இராச்சியத்தில் வாழ்ந்தார். கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த இவர் கிறித்தவராகவே வளர்ந்தார்.


16 வயதில் சவுதி அரேபியாவுக்குச் சென்றவர் அங்கு 8 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு அவர் இசுலாம் மதத்தைத் தழுவினார். ரியாத் நகரில் இசுலாமியக் கல்வியில் பட்டப படிப்பை முடித்து ஐக்கிய இராச்சியம் திரும்பினார். அங்கு பல இடங்களுக்கும் சென்று இனவன்முறையைத் தூண்டும் பிரச்சாரங்களில் ஈடுபட்டார். யூதர்கள், இந்துக்கள், மற்றும் மேலைநாட்டவர்களைக் கொலை செய்வதற்குத் தூண்டினார்.


2007 ஆம் ஆண்டில் இவர் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு, தென்னாப்பிரிக்கா வந்தார். இதன் பின்னர் 2009 டிசம்பர் 24 ஆம் நாள் அவர் நைஜீரியா, அங்கோலா, மொசாம்பிக், சுவாசிலாந்து, மாலாவி, தன்சானியா ஊடாக கென்யா வந்ததாக கென்ய அதிகாரிகள் தெரிவித்தனர். இவர் டிசம்பர் 31 இல் கைது செய்யப்பட்டார். காம்பியா இவரை ஏற்றுக் கொள்ள உடன்பட்டிருந்ததெனினும், அவரை அங்கு ஏற்றி செல்ல எந்த விமான நிறுவனமும் முன்வரவில்லை. தான்சானியாவும் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.

மூலம்

தொகு