கென்யாவில் கால்பந்துப் போட்டி நெரிசலில் சிக்கி பலர் உயிரிழப்பு

திங்கள், அக்டோபர் 25, 2010

கென்யாவில் கால்பந்துப் போட்டி இடம்பெற்ற மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.


சனிக்கிழமை அன்று தலைநகர் நைரோபியில் நியாயோ தேசிய அரங்கத்தில் நாட்டின் இரண்டு புகழ்பெற்ற அணிகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டி ஒன்றிலேயே இந்த நெரிசல் ஏற்பட்டது.


"ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். உதைப்பந்தாட்ட ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் பணம் செலுத்தாது அரங்கத்தினுள் நுழைய முற்பட்ட போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது," உள்ளூர் நிவாரணப் பணியாளர் டேவிட் மட்டீ தெரிவித்தார். 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் கூறினார். இவர்களில் 20 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


போட்டி ஆரம்பித்து அரை மணி நேரத்தின் பின்னரே பார்வையாளர் ஒருவர் போட்டி நடுவர்களுக்கு இந்த அனர்த்தம் பற்றித் தெரிவித்ததில் போட்டி இடை நிறுத்தப்பட்டது. ஆனாலும் 10 நிமிட நேர இடவேளையின் பின்னர் ஆட்டம் மீள ஆரம்பித்தது.


இந்த விபத்துக் குறித்து உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கென்ய அரசுத்தலைவர் ரைலா ஒடிங்கா காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


மூலம்