கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயற்படுத்த தமிழக அமைச்சரவை முடிவு
செவ்வாய், மார்ச்சு 20, 2012
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் செயற்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் திங்கட்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சரவைச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடங்குளம் பிரச்சினை குறித்து ஆராயவென நடுவண், மற்றும் மாநில அரசுகள் அமைத்த வல்லுநர் குழுக்களின் அறிக்கைகள், அணுமின் நிலையத்திற்கு எதிரானவர்களின் மனு இவற்றையெல்லாம் தீர ஆராய்ந்த பிறகு, அணுமின் நிலையம் செயல்படவேண்டும், அது பாதுகாப்பானதே என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் உருசிய நாட்டின் உதவியுடன் ரூ.13,500 கோடி மதிப்பில் தலா 1000 மெகாவாட் திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணுமின் நிலையத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த பல மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து மின் நிலையக் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.
அமைச்சரவை முடிவு வெளியான பின்னணியில், கூடங்குளத்தில் போராட்டக் குழுத்தலைவர்கள் குறைந்தது 9 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இக்கைதைக் கண்டித்து போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் இடிந்தக்கரையில் லூர்து மாதா கோவில் முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். ஆனால் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. அங்கே பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். கூடங்குளம் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் எந்த நேரமும் கைதாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அணுமின் நிலையம் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டிருப்பதாகவும், அணுமின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நீரினால், கடல்வாழ் உயிரினங்களுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை எனவும், கூடங்குளம் பகுதியில் மிகப்பெரிய நிலநடுக்கமோ, ஆழிபேரலையோ ஏற்பட்டதாக வரலாறு இல்லை எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியிலும் அரசு இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கூடங்குளம் அணு உலைகளில் கூடிய விரைவில் மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பணிக்கு திரும்பிய உருசிய அறிவியலாளர்கள் தெரிவித்தனர். உருசிய அறிவியலாளரும், அணு உலை வடிவமைப்பு சிறப்பு நிபுணருமான மேமினோ அலெக்சாண்டர், மற்றும் மாஸ்கோ கிரிகோரி ஆகியோரது தலைமையில் 96 பேர் இன்று பணிக்கு வந்தனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு நிதி வழங்கியதாக செருமானியர் நாடுகடத்தப்பட்டார், பெப்ரவரி 29, 2012
- கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என வல்லுநர் குழு அறிவிப்பு, பெப்ரவரி 20, 2012
மூலம்
தொகு- Indian state approves delayed nuclear power plant, பிபிசி, மார்ச் 19, 2012
- இந்த நாளுக்காகத்தான் காத்திருந்தோம் : ரஷ்ய விஞ்ஞானிகள், தினகரன், மார்ச் 20, 2012
- கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும்: தமிழக அரசு, பிபிசி, மார்ச் 19, 2012