கிழக்கு சைபீரியாவில் 6.8 அளவு நிலநடுக்கம்

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, பெப்பிரவரி 26, 2012

உருசியாவின் கிழக்கு சைபீரியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வுகளை இர்கூத்ஸ்க் பிராந்தியம், மற்றும் கக்காசியா குடியரசு ஆகியவற்றில் வசிக்கும் மக்கள் உணரக்கூடியதாக இருந்ததாக ரியா நோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது.


உருசியாவில் தூவா குடியரசின் அமைவிடம்

மங்கோலியாவின் எல்லைக்கருகே சைபீரியாவின் தூவா குடியரசின் தலைநகர் கிசீல் இல் இருந்து 107 கிமீ கிழக்கே நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக உருசியாவின் அவசரகாலத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. மாலை 15:19 முதல் 15:24 வரை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டது. மாடிக் கட்டடங்களில் குடியிருந்தவர்கள் தமது பொருட்கள் தூக்கி வீசப்பட்டதாகத் தெரிவித்தனர். ஆனாலும் பெரிய அலவில் சேதமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை.


கிழக்கு சைபீரியாவில் கடந்த இரண்டு மாதங்களில் இவ்வாறான பெரும் நிலநடுக்கம் ஏற்படுவது இரண்டாவது தடவையாகும். கடந்த ஆண்டு பிற்பகுதியில், தீவாவின் கா-கெம்ஸ்க்கி மாவட்டத்தில் 6.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் தாக்கியது.


இப்பகுதியில் மேலும் பல நிலநடுக்கங்கள் உருவாகும் என உருசிய அறிவியல் கழகத்தின் சைபீரியக் கிளைத் தலைவர் விக்டர் செலெசினியோவ் எச்சரித்துள்ளார். அடுத்ததாக பைக்கால் ஏரியை அண்டிய பகுதியில் இடம்பெறலாம் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.


மூலம்

தொகு