கியூபாவில் அரசியல் சீர்திருத்தங்களை ராவுல் காஸ்ட்ரோ அறிவித்தார்
ஞாயிறு, ஏப்பிரல் 17, 2011
- 23 அக்டோபர் 2013: கியூபாவில் இரட்டை நாணய முறை விலக்கிக் கொள்ளப்படவுள்ளது
- 3 செப்டெம்பர் 2013: கியூபா-புளோரிடா கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்த அமெரிக்கப் பெண்
- 9 சூலை 2013: சினோடன் சர்ச்சை: அமெரிக்காவிற்கு ராவுல் காஸ்ட்ரோ கண்டனம்
- 1 ஏப்பிரல் 2012: திருத்தந்தையின் வருகையை அடுத்து கியூபாவில் புனித வெள்ளி விடுதலை நாளாக அறிவிப்பு
- 5 பெப்பிரவரி 2012: கியூபாவின் முன்னாள் தலைவர் பிடெல் காஸ்ட்ரோ தனது நினைவுக்குறிப்புகளை வெளியிட்டார்
கியூபாவில் அரசுத் தலைவராக இருப்பவர் ஆகக் கூடியது இரண்டு ஐந்தாண்டுகளே பதவியில் இருக்கும் வகையில் அரசியல் சீர்த்திருத்தத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் அரசுத்தலைவர் ராவுல் காஸ்ட்ரோ அறிவித்துள்ளார்.
அமெரிக்க உளவு நிறுவனம் சிஐஏ இன் ஆதரவுடன் இடம்பெற்ற பன்றிக் குடா தாக்குதல் முறியடிக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழாவுடன் இணைந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான கியூப மக்கள் தலைநகர் அவானாவில் கூடினர். 14 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் ராவுல் காஸ்ட்ரோ உரையாற்றினார். கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்திய அவர் கட்சியில் விமரிசனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனக் கூறினார்.
79 அகவையுள்ள ராவுல் காஸ்ட்ரோ 2008 ஆம் ஆண்டில் தனது சகோதரர் பிடெல் காஸ்ட்ரோவிடம் இருந்து ஆட்சியைப் பெற்றார். இவர்கள் இருவரும் இணைந்து 52 ஆண்டுகள் கியூபாவை ஆட்சி செய்தனர்.
காஸ்ட்ரோவின் உரையில் நாட்டின் பொருளாதாரத்தில் அரசின் செல்வாக்கைக் குறைப்பது குறித்தும், தனியார் துறையை ஊக்குவிப்பது குறித்தும் அதிகம் பேசப்பட்டது. கியூபாவின் புதிய பொருளாதாரக் கோட்பாடு முழுமையாக நடைமுறைக்கு வர குறைந்தது ஐந்தாண்டுகள் பிடிக்கும் என அவர் கூறினார்.
இலவசக் கல்வி, இலவச மருத்துவம் போன்றவை தொடர்ந்து தரப்படும் என அவர் உறுதி அளித்தார். ஆனாலும், அத்தியாவசியப் பொருட்களுக்கான உதவி மானியம் படிப்படியாக அகற்றப்படும் எனக் கூறினார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கமைய ஏற்கனவே 200,000 பேர் சுய வேலைத்திட்டத்தில் இணைந்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனாலும் கியூபா தனது சோசலிசப் பாதையிலேயே தொடர்ந்து செல்லும் எனவும் சொத்துக்கள் சேர்ப்பது அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் கூறினார்.
1961 ஆம் ஆண்டி ஏப்ரல் 17 ஆம் நாள் கியூபாவில் இருந்து வெளியேறிய அதிருப்தியாளர்கள் சிலர் சிஐஏ இன் உதவியுடன் காஸ்ட்ரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் அவானாவுக்கு 160 கிமீ தென்கிழக்கே பன்றிக் குடாவில் தரையிறங்கினர். பிடெல் காஸ்ட்ரோவின் தலைமையில் பல்லாயிரக்கணக்கானோர் எதிர்த்தாக்குதல் நடத்தி இரண்டு நாட்களில் கிளர்ச்சியை முறியடித்தனர்.
கட்சியின் மாநாடு 4 நாட்களுக்கு நடைபெறுகிறது.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- 14 ஆண்டுகளின் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடத்த காஸ்ட்ரோ முடிவு, நவம்பர் 9, 2010
மூலம்
தொகு- Raul Castro proposes Cuba political term limits, பிபிசி, ஏப்ரல் 16, 2011
- Raul Castro proposes term limits in Cuba, அல்ஜசீரா, ஏப்ரல் 16, 2011