காம்பியாவுக்கான எதிர்க்கட்சிக் குழு செனிகல் நாட்டில் அமைக்கப்பட்டது
சனி, செப்டெம்பர் 15, 2012
- 3 அக்டோபர் 2013: பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகுவதாக காம்பியா அறிவிப்பு
- 15 செப்டெம்பர் 2012: காம்பியாவுக்கான எதிர்க்கட்சிக் குழு செனிகல் நாட்டில் அமைக்கப்பட்டது
- 25 ஆகத்து 2012: காம்பியாவில் ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டதாக பன்னாட்டு மன்னிப்பகம் தெரிவிப்பு
காம்பியாவிற்கான நாடுகடந்த அரசு ஒன்றை அமைக்கும் நோக்கோடு எதிர்க்கட்சிக் குழு ஒன்று அருகில் உள்ள செனிகலில் அமைக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலங்களில் மரணதண்டனையை எதிர் நோக்கும் சில சிறைக்கைதிகள் தூக்கிலிடப்பட்டதை அடுத்தே தாம் இம்முடிவுக்கு வந்ததாக இக்குழுவின் தலைவர் சேக் சிதியா பாயோ தெரிவித்துள்ளார். காம்பியாவின் தேசிய இடைக்காலப் பேரவை (CNTG) என்ற இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அரசுத்தலைவர் யாகியா ஜாமெசுவின் சர்வாதிகார ஆட்சியை அகற்றுவதே என அவர் கூறினார்.
மரணதண்டனை விதிக்கப்பட்டோர் பலர் அரசியல் கைதிகள் என மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டியுள்ளன.
காம்பியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கும் 47 பேரினதும் மரணதண்டனைகளை செப்டம்பர் மாத நடுப்பகுதிக்குள் நிறைவேற்றவிருப்பதாக கடந்த மாத இறுதியில் அரசுத்தலைவர் கூறியிருந்தார். இதனை அடுத்து ஒன்பது பேர் ஆகத்து 25 இல் தூக்கிலிடப்பட்டார்கள். இந்த ஒன்பது பேரில் இருவர் செனிகல் நாட்டவர்கள் ஆவர். காம்பியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்படுவது 27 ஆண்டுகளுக்குப் பின்னர் இதுவே முதற் தடவையாகும்.
35 உறுப்பினர்களைக் கொண்ட இடைக்காலப் பேரவை செனிகல் தலைநகர் டக்காரைத் தளமாகக் கொண்டிருக்கும் என திரு. பாயோ கூறினார்.
1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இளம் இராணுவ வீரராக இருந்த யாகியா ஜாமி ஆட்சியைக் கைப்பற்றினார். அதன் பின்னர் அவர் அடுத்தடுத்து இடம்பெற்ற நான்கு சர்ச்சைக்குரிய பல-கட்சித் தேர்தல்களில் வெற்றி பெற்றார். யாகியா ஜாமியின் மனித உரிமை மீறல்கள், குறிப்பாக ஊடக சுதந்திரம் பல பன்னாட்டு அமைப்புகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தன.
இதற்கிடையில், மரணதண்டனைகளை நிறைவேற்றுவதை இடை நிறுத்தி வைத்துள்ளதாக இன்று அரசுத்தலைவர் யாகியா ஜாமி அறிவித்துள்ளார். பல வெளி நாடுகளும், அமைப்புகளும் கேட்டுக் கொண்டதை அடுத்தே இது இடைநிறுத்தப்படுவதாக அரசுத்தலைவரின் அறிக்கை கூறுகிறது.
மூலம்
தொகு- Gambia opposition group formed in Senegal, பிபிசி, செப்டம்பர் 14, 2012
- Gambia's President Jammeh halts executions amid outcry, பிபிசி, செப்டம்பர் 15, 2012
- Gambia's president says suspending executions, for now, ராய்ட்டர்சு, செப்டம்பர் 15, 2012