கருநாடக முதல்வர் மீது வழக்குப் பதிய ஆளுநர் அனுமதி
ஞாயிறு, சனவரி 23, 2011
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 22 செப்டெம்பர் 2016: செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவிப்பு
- 12 திசம்பர் 2013: கவலை அளிக்கும் கன்னட விக்கிப்பீடியாவின் மெதுவான வளர்ச்சி
- 29 சனவரி 2013: கமலின் ‘விஸ்வரூபம்’ திரைப்படம்: கருநாடக மாநிலத்தில் இன்று வெளியீடு
- 14 பெப்பிரவரி 2012: கர்நாடக மாநில உயர் கல்வித்துறை அமைச்சர் வி.எஸ். ஆச்சார்யா காலமானார்
இந்தியாவின் கருநாடக மாநில முதல்வர் எதியூரப்பாவுக்கு எதிரான ஊழல் புகாரை விசாரிக்க மாநில ஆளுநர் அனுமதி அளித்ததை அடுத்து கருநாடகாவின் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
நில ஒதுக்கீட்டில் நடந்த முறைகேட்டில் எதியூரப்பாவுக்கு பங்கிருப்பதாகக் கூறி இரு வழக்கறிஞர்கள் வழக்குகளைப் பதிவு செய்தனர். அரசு நிலத்தை, அதற்கான பட்டியலில் இருந்து நீக்கி, தனது குடும்பத்தினருக்கு குறைந்த விலையில் ஒதுக்கியதாக எதியூரப்பா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணைகள் வரும் சனவரி 24-ம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
முதல்வருக்கு எதிராக வழக்குத் தொடர ஆளுநர் அனுமதியளித்தைக் கண்டித்து, நேற்று சனிக்கிழமை கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக சார்பில் கடையடைப்புப் போராட்டம் காரணமாக கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மங்களூர், தும்கூர், தலைநகர் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 100 சதவீத பாதிப்பு இருந்தது. 31 பேருந்துகள் எரிக்கப்பட்டன. ஏராளமான பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன. அரசு பேருந்துகள் உள்பட பல வாகனங்களுக்குத தீயிடப்பட்டன.
இந்நிலையில், ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் முதல்வர் பதவியைத் துறப்பீர்களா செய்வீர்களா என முதல்வர் எதியூரப்பாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "நான் எதற்காக பதவி துறக்க வேண்டும்?" என்று திருப்பிக் கேட்டார். இந்த விவகாரத்தில் எதியூரப்பா பதவி துறக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக தலைவர் நிதின் கட்காரியும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் கூறுகையில், "ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகும் முதல்வர் அல்லது அமைச்சர் மீது வழக்கு தொடர அனுமதி கொடுக்கும் அதிகாரம் மற்றும் உரிமை ஒரு மாநில ஆளுநருக்கு உள்ளது. இது சட்டப்பிரிவுகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது," என்றார்.
ஆளுநரின் இந்த உத்தரவுக்கு தடை கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கர்நாடக பாஜக முடிவு செய்துள்ளது.
மூலம்
தொகு- முதல்வர் மீது வழக்கு, பீ.பீ.சி தமிழ் சனவரி 23, 2011
- எடியூரப்பா மீது நீதிமன்றத்தில் 2 ஊழல் வழக்குகள் பதிவு!, தட்ஸ் தமிழ் சனவரி 23, 2011
- Yeddyurappa's act immoral but not illegal: Gadkari யாகூ செய்திகள் - சனவரி 23, 2011