கருங்கல்லில் நாதசுரம் வடிவமைத்து நாமக்கல் சிற்பி சாதனை

ஞாயிறு, சனவரி 17, 2010


தமிழ்நாட்டைச் சேர்ந்த சிற்பி ஒருவர் கருங்கல்லில் முதற்தடவையாக நாதசுவரம் ஒன்றை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார்.


நாமக்கல் கூலிப்பட்டியைச் சேர்ந்த 53 அகவையுடைய பி. சின்னக்கண்ணு என்ற சிற்பியே 3.5 கிலோ எடையில், இரண்டரை அடி உயரத்தில் கருங்கல்லினால் நாதசுரத்தை வடிவமைத்தவர். ஒரு தனிக்கல்லிலேயே இந்தக் கருவியை அவர் செதுக்கியுள்ளார்.


நாதசுரத்தைக் கருங்கலில் வடிவமைத்து சாதனை புரியலாம் என்று 4 மாதங்களாக அயராது உழைத்தார் இதன் பயனாக ஏழு சுவரங்களையும் இனிமையாக ஒலிக்கும் நாதத்தை உருவாக்கியுள்ளார்.


நாதசுரத்தில் 12 துளைகளையிட்டு, அனைத்து தாளங்களையும் தப்பாமல் இசைப்பது என்பது சாதனைக்குரியது. இரண்டரை அடி உயரமுள்ள இந்த நாதசுரம் இரு துண்டுகளாக செதுக்கப்பட்டது. முன் பகுதி குழாய் போன்ற வடிவமைப்பிலும் பின் பகுதி நாதசுரத்தின் துளைகள் அடங்கிய குழல் பகுதியாகவும் செதுக்கப்பட்டுள்ளது. இது வேறு எங்கும் நிகழ்த்தப்படாத சாதனை.


"சில மாதங்களாக சிந்தித்து, சரியான கற்களைத் தேர்வு செய்ய, பல இடங்களுக்குச் சென்று ஒரே கல்லைத் தெரிவு செய்து, அதில் நாதசுரத்தை வடிவமைத்துள்ளேன். நாதசுரக் கலைஞரை அழைத்து வந்து, அனைத்து இராகங்களையும் அதில் இசைக்கச் செய்துள்ளேன். ஒலி, ஒளி நாடாக்களில், பதிவு செய்து, இந்த இசைக்கும் வழக்கமான நாதசுர இசைக்கும் எந்த வித வேறுபாடும் இல்லாதிருப்பதை உறுதி செய்தேன்," என்றார் சின்னக்கண்ணு.


சிற்பக் கலையில் பல்வேறு சாதனைகளைப படைத்துள்ளார் சின்னக்கண்ணு. மூன்றரை அடி உயர லலிதாம்பிகை சிலையில், தலை, கை, கால் பகுதியில் தட்டினால், சப்த சுவரங்கள் ஒலிக்கும் வகையில் அமைத்துள்ளார்; தமிழகத்தில், ஏழு கன்னிகள் கொண்டு, நான்கடி உயரத்தில் ஒரே கல்லில் வடிக்கப்பட்ட, இரண்டு கற்சங்கிலிகளை உருவாக்கியுள்ளார்.

மூலம்