கம்போடியாவின் அங்கூர் வாட் கோயில் புனரமைப்பு நிறைவு

ஞாயிறு, சூலை 3, 2011

கம்போடியாவின் மிகப் பழமையான அங்கூர் வாட் இந்துக் கோயிலின் புனரமைப்பு வேலைகள் நிறைவு பெற்று மீளத் திறக்கப்பட்டது. இப்புனரமைப்பு வேலை உலகின் மிகப் பெரும் புதிரான பணியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


அங்கூர் வாட் கோயில்

புனரமைப்புப் பணிகளின் போது கோயிலின் மூன்றடுக்குக் கோபுரத்தின் ஏறத்தாழ 300,000 கருங்கற்கள் அனைத்தும் ஒவ்வொன்றாகப் பிரித்தெடுக்கப்பட்டு மீளப் பொருத்தப்பட்டது. 1960களில் ஆரம்பிக்கப்பட்ட புனருத்தாரண வேலைகள் கம்போடியாவின் உள்நட்டுப் போரினால் தாமதப்படுத்தப்பட்டு, 1990களின் நடுப்பகுதியில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.


புனரமைக்கப்பட்ட கோயில் கோபுரத்தின் திறப்பு விழாவில் கம்போடிய அரசர் நொரடோம் சிகாமணி, மற்றும் பிரெஞ்சுப் பிரதமர் பிரான்சுவா பிலியோ ஆகியோர் கலந்து கொண்டனர். புனரமைப்புப் பணிகளுக்கு பிரான்ஸ் 10 மில்லியன் யூரோக்களை வழங்கியிருந்தது.


1950களில் கோபுரம் இடிந்து விழும் தற்வாயில் இருந்தது. பிரெஞ்சு தொல்லியலாளர்களின் குழு ஒன்று இதனை ஆராய்ந்ததில், கோபுரத்தின் கருங்கற்களை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுக்க முடிவு செய்தது. கிட்டத்தட்ட மூன்று இலட்சம் கருகற்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் இலக்கமிடப்பட்டு சுற்றிவர இருந்த காடுகளில் அடுக்கப்பட்டன. ஆனாலும் இவ்வேலைகள் உள்நாட்டுப் போரினால் பாதிப்படைந்தன. கற்கள் குறித்த அனைத்து ஆவணங்களும் 1975 ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த கெமர் ரூச் ஆட்சியினரால் அழிக்கப்பட்டன. பின்னர் 1995 ஆம் ஆண்டில் இவ்வேலைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டது.


கிட்டத்தட்ட 10,000 கருங்கற்கள் வரை புனரமைப்புக்குப் பின்னர் எஞ்சியுள்ளன. இவை அனைத்தும் கோயிலைச் சுற்றிவர உள்ல காடுகளில் பரவலாக அடுக்கப்பட்டுள்ளன.


11ம் நூற்றாண்டைச் சேர்ந்த அங்கூர் வாட் கோயில் ஆண்டு தோறும் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது. இது இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.


மூலம் தொகு