கமரூன் பக்காசியின் ஆட்சியுரிமையை நைஜீரியாவிடம் இருந்து பெற்றது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வியாழன், ஆகத்து 15, 2013

2008 ஆம் ஆண்டில் நைஜீரியா பிரித்து விட்ட எண்ணெய்-வளம் மிக்க பக்காசி தீபகற்பத்தை கமரூன் அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொண்டது.


கமரூனில் பக்காசி தீபகற்பம்

பன்னாட்டு நீதிமன்றத்தின் ஆணைக்கேற்ப இப்பிராந்தியம் கமரூனுக்குக் கையளிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் ஐந்தாண்டுகள் ஆட்சி மாற்றம் இப்பிராந்தியத்தில் இடம்பெற்றது. இப்பிராந்தியத்தின் 90 விழுக்காட்டினர் நைஜீரியர்கள். இவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள் ஆவர். இக்காலப்பகுதியில் இவர்கள் வருமான வரியில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். நைஜீரியாவில் சிறு-வணிகம் செய்வோருக்கு வரி விலக்கு அமுலில் உள்ளது. ஆனால், இவ்வரி விலக்கு கமரூனில் இல்லாததால், இவர்கள் தற்போது வரி கட்ட வேண்டியவர்களாக உள்ளனர்.


1,000 சதுர கிமீ பரப்பளவுள்ள பக்காசி தீபகற்பத்தில் சுமார் 300,000 பேர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பகுதியிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.


பக்காசி மீனவர்கள் தமது மீன்களை வழக்கமாக எலையைத் தாண்டிச் சென்று நைஜீரியாவில் விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்குத் தற்போது ஏற்றுமதி வரி, மற்றும் சுங்க வரி போன்றவை அறவிடப்படவுள்ளன.


1960 ஆம் ஆண்டு நைஜீரியா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்ற நாள் முதல் பெக்காசி நைஜீரியாவின் ஆட்சியில் இருந்து வருகிறது. ஆனாலும், குடியேற்றவாதக் காலத்தில் இருந்த வரைபடம் மூலம் கமரூன் அதன் ஆட்சியைக் கோரி வந்தது. பக்காசி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் 1981 ஆம் ஆண்டில் முறுகல் நிலை ஆரம்பித்திருந்தது. 1994 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். அதே ஆண்டில் நைஜீரியாவுக்கு எதிராக கமரூன் பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 2002 ஆம் ஆண்டில் பக்காசியின் உரிமை கமரூனுக்கு வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.


நைஜீரியா இத்தீர்ப்பை நிராகரித்தது. ஆனாலும், ஐக்கிய நாடுகளின் தலையீட்டில், இரு நாடுகளும் தமக்கிடையே இருந்த வேறுபாடுகளை நீக்க கூட்டு ஆணைக்குழுவை நியமித்தது. இதனை அடுத்து 2008 ஆகத்து 14 இல் நைஜீரியா கமரூனிடம் இதன் ஆட்சிப் பொறுப்பைக் கையளித்தது. ஆனாலும், ஐந்தாண்டுகள் இப்பகுதி ஐநாவின் கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்த ஐந்தாண்டுகள் கழிந்த நிலையில் இப்போது அதன் முழுப் பொறுப்பையும் கமரூன் அதிகாரபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.


மூலம்

தொகு