கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது உற்பத்தி நிலையம், தமிழகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

சனி, பெப்பிரவரி 23, 2013

கடல்நீரிலுள்ள உப்புத்தன்மையை நீக்கி, அந்நீரை பலநிலைகளில் சுத்திகரித்து, குடிப்பதற்குரிய நீராக மாற்றும் தொழிற்நுட்பத்திற்கு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக, காஞ்சிபுரம் மாவட்டம் – மகாபலிபுரம் அருகேயுள்ள நெம்மேலி எனும் ஊரில் கடல்நீரைக் குடிநீராக்கும் உற்பத்தி நிலையத்தின் இயக்கத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைத்தார். இந்தியப் பணமதிப்பின்படி 871 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தில் தினந்தோறும் 10 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யப்படும்.


சென்னை மாநகருக்கு தெற்கே 36 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது நெம்மேலி. இன்னும் ஓரிரு தினங்களில் இங்கு உற்பத்தியாகும் குடிநீர், தென் சென்னை மற்றும் அதன் விரிவாக்கப் பகுதிகளுக்கு விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 15 இலட்சம் மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


விஏ டெக் வாபேக் (VA Tech Wabag) எனும் நிறுவனம் இந்த உற்பத்தி நிலையத்தை கட்டித் தந்துள்ளது. மாநில அரசின் ‘சென்னை மெட்ரோவாட்டர்’ நிறுவனமே இந்த நிலையத்தை நேரடியாக இயக்கும். ஆங்காங்கு அமைக்கப்பட்டுள்ள நிலத்தடித் தொட்டிகளின் உதவிகொண்டும், ஏறத்தாழ 64 கிலோமீட்டர் தூரத்திற்கு போடப்பட்டுள்ள குழாய் இணைப்புகளின் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். இந்த விநியோக கட்டமைப்புகளை இந்தியாவின் புகழ்வாய்ந்த கட்டுமான நிறுவனமான எல்&டி நிறுவனம் செய்துள்ளது.


உற்பத்தி செயல்முறை
  1. கடலில் 1 கிலோமீட்டர் தூரம்வரை அமைக்கப்பட்டுள்ள குழாய்த் தொடர் மூலம் தினந்தோறும் 26.5 கோடி லிட்டர் கடல்நீர் எடுக்கப்படும்.
  2. முதற்நிலை சுத்திகரிப்பு: ‘மேல்நோக்கு வடிகட்டி’ மூலமாக கடல்நீர் வடிகட்டப்படும்
  3. இரண்டாம் நிலை சுத்திகரிப்பு: ‘தட்டு வடிகட்டி’ மூலமாக 100 மைக்ரான் அளவுக்கு மேலுள்ள கசடுகள் வடிகட்டப்படும். இது இசுரேல் நாட்டின் தொழிற்நுட்பம் என அறியப்படுகிறது.
  4. மூன்றாம் நிலை சுத்திகரிப்பு: ‘நுண் வடிகட்டிகள்’ மூலமாக ௦0.1 மைக்ரான் அளவிலான கசடுகள் மற்றும் பாக்டீரியாக்கள் நீக்கப்படும். இது நெதர்லாந்து நாட்டின் தொழிற்நுட்பம் என்கிறார்கள்.
  5. நான்காம் நிலை சுத்திகரிப்பு: ‘எதிர்ச் சவ்வூடு பரவல்’ முறையில் உப்பு நீக்கப்படுகிறது. இது சப்பான் நாட்டின் தொழிற்நுட்பம் என அறியப்படுகிறது. 10 கோடி லிட்டர் நீர், குடிநீராகக் கிடைக்கிறது.
  6. மீதமாகும் அதிக உப்புத்தன்மையுடைய 16.5 கோடி லிட்டர் நீர், கடலில் 650 மீட்டர் தொலைவில்; கடல் மட்டத்திற்கு கீழே 8 மீட்டர் ஆழத்தில் மறுசுழற்சிக்காக விடப்படும்.



மூலம்

தொகு