கசக்ஸ்தான் தற்கொலைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

ஞாயிறு, நவம்பர் 13, 2011

கசக்ஸ்தானின் தெற்கே தராஸ் நகரில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் ஏழு பேர் கொல்லப்பட்டனர். நாட்டின் வரலாற்றில் இது ஒரு மிக மோசமான தாக்குதல் எனக் கூறப்படுகிறது.


இசுலாமியப் போராளி எனச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நால்வர், இரண்டு பொதுமக்கள் என அறுவரைச் சுட்டுக் கொன்று விட்டுப் பின்னர் அந்நபர் தன்னைத் தானே குண்டு வைத்துத் தகர்த்துள்ளார். மேலும் மூன்று காவல்துறையினர் காயமடைந்தனர். இத்தாக்குதல் நேற்று சனிக்கிழமை காலையில் இடம்பெற்றுள்ளது.


கசக்ஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் தற்போது தலை தூக்குவதையே இத்தாக்குதல் காட்டுகிறது என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


தற்கொலைக் குண்டுதாரி ஜிகாத் அமைப்பைச் சேர்ந்த கரீயெவ் என அழைக்கப்படும் 34 வயதுடையவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கசக்ஸ்தானில் கடந்த சில மாதங்களாக ஆங்காங்கே சில குண்டுவீச்சுச் சம்பவங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கடந்த மாதம் அட்டிராவு என்ற மேற்கு நகரில் இரண்டு குண்டுகள் வெடித்தல. இத்தாக்குதலில் குண்டுதாரி மட்டுமே கொல்லப்பட்டார். ஜுண்ட் அல்-கலீஃபா என்ற இசுலாமியத் தீவிரவாத அமைப்பு தாமே அத்தாக்குதலை நடத்தியதாகக் கூறியிருந்தது.


மே மாதத்தில் அக்டோபே என்ற இடத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர்.


மூலம்

தொகு