ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடக்கி வைத்தார்

This is the stable version, checked on 23 சூலை 2018. 1 pending change awaits review.

வியாழன், மே 30, 2013

தமிழகத்தின் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாழும் சுமார் 33 இலட்சம் பேர் பயன்பெறும் வகையிலான கூட்டுக் குடிநீர்த் திட்டத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ‘காணொலிக் கருத்தரங்கு’ வசதி மூலமாக இத்திட்டத்தினை முதல்வர் தொடக்கி வைத்தார்.


ரூபாய் 1928.8 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ‘ஒகேனக்கல் குடிநீர் வழங்கல் மற்றும் புளோரைடு பாதிப்பு குறைப்புத் திட்டம்’ எனப் பெயர் கொண்டதாகும். இத்திட்டத்தின்கீழ் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள், 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 6,755 குடியிருப்புகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


காவிரி ஆற்றினை நீராதாரமாகக் கொண்டிருக்கும் இத்திட்டத்தினால் சிற்றூர்களில் வாழும் ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 40 லிட்டர் எனும் விகிதத்தில் நீர் வழங்கிட முடியும். நகரங்களில் வாழ்பவருக்கு இவ்விகிதம் 135 லிட்டர் நீர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திட்டத்தின் பின்புலம்

மாநிலத்தின் வறட்சியான பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்டமும் தருமபுரி மாவட்டமும் குறிப்பிடத்தக்கவை. மாநிலத்தின் வடமேற்குப் பகுதியான இம்மாவட்டங்களில் நிலத்தடி நீரிலுள்ள புளோரைடின் அளவு அதிகமாக இருக்கும். இதன் காரணமாக இப்பகுதிகளில் வாழும் மக்கள் எலும்பு மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. 'நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர்வழங்கல்' துறையின் ஆய்வு அறிக்கை ஒன்று, இம்மாவட்டப் பள்ளி மாணவர்களில் பலரும் பல்லீறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


இந்த நீர்த்திட்டம், 1960ஆம் ஆண்டில் காமராசர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பிறகு பல காரணங்களினால் இத்திட்டம் எடுத்துக்கொள்ளப்படவில்லை. 1986ஆம் ஆண்டில் எம். ஜி. இராமச்சந்திரன் முதல்வராக இருந்தபோது திருவண்ணாமலை, வேலூர், கடலூர் ஆகிய மேலும் 3 மாவட்டங்களையும் திட்டத்தின்கீழ் கொண்டுவந்தார். அப்போது திட்டச் செலவு ரூபாய் 110 கோடி எனக் கணக்கிடப்பட்டது. காமராசரின் நினைவாக இத்திட்டத்திற்கு ‘காமராஜ் திட்டச் செயல்திட்டம்’ என எம். ஜி. ஆர். பெயரிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.


1994ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது இத்திட்டம் மீண்டும் உயிர்பெற்றது. அப்போது திட்டச் செலவு, ரூபாய் 450கோடி எனக் கணக்கிடப்பட்டது. 1996ஆம் ஆண்டில் திமுக ஆட்சியின்போது, ரூபாய் 600 கோடியாக உயர்ந்த திட்டச் செலவு நிதியை ஜப்பானிடமிருந்து பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் 1998ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட போக்ரான் அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் விளைவால் இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளின் காரணமாக, இந்த நிதியுதவி கிடைப்பது சிக்கலானது.


2006ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில், திட்டச் செலவு ரூபாய் 1005 கோடி என்றானது. 2010ஆம் ஆண்டில் இத்தொகை ரூபாய் 1928.8 கோடி என்றாகி ஒருவழியாக திட்ட வேலைகள் துவக்கம் பெற்றன. இத்தொகையின் 80 சதவிகிதமானது ‘ஜப்பான் அனைத்துலக கூட்டுறவு முகமை’ (The Japan International Cooperation Agency – JICA) எனும் அமைப்பிடமிருந்து பெறப்பட்டது. ‘தமிழ்நாடு நீர்வழங்கல் மற்றும் கழுவுநீரகற்றும் வாரியம்’ எடுத்து நடத்திய திட்டங்களில், திட்டச் செலவு அடிப்படையில் பார்க்கும்போது, இதுவே பெரிய திட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



மூலம்

தொகு