ஐவரி கோஸ்டில் அரசுத்தலைவருக்கு அழுத்தம் கொடுக்க பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு

திங்கள், திசம்பர் 27, 2010

ஐவரி கோஸ்டின் அரசுத்தலைவர் லோரண்ட் குபாக்போவின் பதவி விலகலுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் அலசானி ஓட்டாராவுக்கு ஆதரவான அரசியல்கட்சிகள் இன்று திங்கட்கிழமை முதல் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.


இடது: லோரண்ட் குபாக்போ
வலது: அலசானி ஓட்டாரா

ஐவரி கோஸ்டின் மிகப் பெரும் நகரான அபிஜானில் பெருமளவிலானோர் வேலை நிறுத்தத்தில் பங்குபற்றவில்லை என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


நவம்பர் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலை அடுத்து அரசுத்தலைவர் குபாக்போ பதவி விலக மறுத்து வருகிறார். தேர்தலில் பல முறைகேடுகள் இடம்பெற்றதாக அவர் தெரிவிக்கிறார். ஆனாலும், எதிர்க்கட்சி வேட்பாளர் ஓட்டாரா வெற்றி பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் உட்படப் பல உலக நாடுகள் அறிவித்துள்ளன.


இதற்கிடையில் குபாக்போ பதவி விலகாவிட்டால் அவர் வெளியேற்றப்படுவார் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு எக்கோவாஸ் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் பிரான்சும் தமக்கு எதிராகச் சதி செய்கிறது என குபாக்போ குற்றம் சாட்டியுள்ளார்.


ஐவரிகோஸ்டில் தேர்தலின் பின்னர் நிலவும் அச்சமான சூழ்நிலையினால் பல்லாயிரக்கணக்கானோர் அங்கிருந்து லைபீரியாவுக்குச் சென்றுள்ளனர். சர்ச்சை மிக்க தேர்தலினைத் தொடர்ந்து அங்கு இடம்பெறும் வன்முறைகளினால் ஏறத்தாழ 14,000 பேருக்கு மேல் அயல்நாடான லைபீரியாவில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.


இந்நிலையில் மேற்காபிரிக்க நாடுகளின் அரசுத்தலைவர்கள் நாளை செவ்வாய்க்கிழமை ஐவரிகோஸ்டுக்குச் செல்லவுள்ளதாக பெனின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.


அல்ஜசீரா செய்திச் சேவைக்கு அரசுத்தலைவர் குபாக்போ இன்று வழங்கிய பேட்டி ஒன்றில், பொது மக்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் குழுவிற்க்உ அழைப்பு விடுக்கிறேன் எனவும், நாட்டில் அமைதி ஏற்படுத்துவதற்கு ஆட்சியை எதிர்க்கட்சியினருடன் பங்கிட்டுக் கொள்ள தான் எச்சரிக்கயுடன் தயாராயுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு