ஐநா படைகளை வெளியேறுமாறு ஐவரி கோஸ்ட் அரசு கட்டளை
ஞாயிறு, திசம்பர் 19, 2010
- 9 ஏப்பிரல் 2015: ஐவரி கோஸ்டில் இரசாயனக் கழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு
- 1 சனவரி 2013: ஐவரி கோஸ்டில் புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்படப் பலர் உயிரிழப்பு
- 22 செப்டெம்பர் 2012: மோதல்களை அடுத்து ஐவரி கோஸ்ட் கானாவுடனான எல்லைகளை மூடியது
- 9 சூன் 2012: ஐவரி கோஸ்டில் ஐநா அமைதிப் படைகள் மீது தாக்குதல், 8 பொதுமக்கள் உட்பட15 பேர் உயிரிழப்பு
- 30 நவம்பர் 2011: ஐவரி கோஸ்ட் முன்னாள் தலைவர் பாக்போ பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டார்
ஐவரி கோஸ்டில் சென்ற மாதம் நடைபெற்ற அரசுத்தலைவர் தேர்தலை அடுத்து அங்கு வன்முறைகள் கிளம்பியதை அடுத்து அபிஜான் நகரில் நிலை கொண்டுள்ள ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையினரை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டின் அரசுத்தலைவர் லோரண்ட் கிபாக்போ அறிவித்துள்ளார். ஆனாலும், தமது படையினர் தமது பணி நிறைவேறும் வரையில் அங்கிருந்து வெளியேறப் போவதில்லை என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.
ஐநா மற்றும் பிரெஞ்சுப் படைகள் முன்னாள் போராளிகளுடன் கூட்டு வைத்துள்ளனர் என அரசுத்தலைவரின் பேச்சாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்ற மாதம் இடம்பெற்ற தேர்தல் முடிவுகளின் படி எதிர்க்கட்சித் தலைவர் அலசானி ஊட்டாரா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அவருக்குப் பதவியைத் தர தற்போதைய அரசுத்தலைவர் கிபாக்போ மறுத்துள்ளார். ஊட்டாரா தற்போது ஐநா படையினரின் பாதுகாப்பில் உள்ளார். ஊட்டாராவின் வெற்றியை ஐநா அமைதிப்படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். கிபாக்போ தானே வேறி பெற்றதாகக் கூறி வருகிறார்.
ஐநா படைகள் ஐவரி கோஸ்டின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக அரசுத்தலைவரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தமது வாகன அணி ஒன்று அபிஜானில் தாக்குதலுக்கு உள்ளானதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலர் பெரிய பசாம் என்ற இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முதல் நாள் ஊட்டாராவின் ஆதரவாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர்.
ஐக்கிய நாடுகள், அமெரிக்கா, பிரான்சு, மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியன கிபாக்போ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கிபாக்போ பதவி விலக வேண்டும் எனவும் அல்லாதுவிடில் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என பிரெஞ்சு அதலைவர் நிக்கொலா சர்க்கோசி வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஐக்கிய நாடுகளின் அவசரத்தேவையற்ர பணியாளர்கள் ஏற்கனவே ஐவரி கோஸ்டில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தொடர்புள்ள செய்திகள்
தொகுமூலம்
தொகு- "Unarmed demonstrators shot dead in Ivory Coast". எக்கிலேசியா, டிசம்பர் 18, 2010
- "Gbagbo asks UN, French forces to leave Ivory Coast". ராய்ட்டர்ஸ், டிசம்பர் 18, 2010
- "UN chief Ban rejects call for Ivory Coast troop pullout". பிபிசி, டிசம்பர் 18, 2010