ஏப்ரல் 12 மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஐநா பிரகடனம்

வெள்ளி, ஏப்பிரல் 8, 2011

மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாளாக ஏப்ரல் 12 ஆம் நாளை ஆண்டுதோறும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நேற்று வியாழக்கிழமை தீர்மானிக்கப்பட்டது.


விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் நினைவாக வெளியிடப்பட்ட உருசிய நாணயம்

உருசியாவினால் இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. 1961 இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற உருசியரான யூரி ககாரின் நினைவாக உருசியாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் விண்வெளி வீரர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


"விண்வெளிக்கான மனிதப் பயணம் ஆரம்பமாகி ஐம்பதாண்டுகள் கழிந்து விட்டது, ஆனாலும் யூரி ககாரினின் சாதனை இன்று உலக நாடுகளில் விண்வெளிப்பயணத்தில் மனித சாதனைகள் அதிகரிப்பதற்கு ஒரு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது," என ஐநா அதிகாரி கியோ அகசாக்கா குறிப்பிட்டார்.


விண்வெளிக்கான முதலாவது மனிதப் பயணத்தின் 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஐநா தலைமையகத்தில் கண்காட்சி ஒன்றும் நடைபெற்று வருகிறது.


1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் யூரி ககாரின் வஸ்தோக்-1 விண்கலத்தில் பயணித்து 108 நிமிடங்கள் பூமியைச் சுற்றி வந்து பாதுகாப்பாகத் தரையிறங்கினார்.


மூலம் தொகு