எண்ணெய் வயல்கள் தொடர்பாக சூடானுக்கும் தெற்கு சூடானுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது

சனி, ஆகத்து 4, 2012

எண்ணெய் வயல்கள் தொடர்பாக சில மாதங்களுக்கு முன்னர் போர்ச்சூழலில் சிக்கியிருந்த சூடானும் தெற்கு சூடானும் தற்போது உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.


"நியாயமான புரிந்துணர்வு" எட்டப்பட்டுள்ளதாகவும், ஆனாலும் மேலதியப் பாதுகாப்புத் தேவை எனவும் சூடானின் பேச்சாளர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுக்கள் எத்தியோப்பியத் தலைநகர் அடிசு அபாபாவில் கடந்த மூன்று வாரங்களாக இடம்பெற்று வந்தன. இப்பேச்சுகளுக்கு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் தாபோ உம்பெக்கி தலைமை வகித்தார்.


சூடான் செலுத்தும் கடவுப் பணம் தொடர்பான சர்ச்சையை அடுத்து இவ்வாண்டு சனவரி மாதத்தில் தெற்கு சூடான் தமது எண்ணெய் உற்பத்தியை இடைநிறுத்தியிருந்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் இருந்து வந்தது. எப்போது தெற்கு சூடான் மீண்டும் எண்ணெய் உற்பத்தியை ஆரம்பிக்கும் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தெரிவிக்கப்படவில்லை. பாதுகாப்புத் தொடர்பான சர்ச்சைகளுக்கு முடிவு எட்டப்பட்டவுடன், அமைதித் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பேச்சாளர் மித்ரிபு சிதிக் தெரிவித்தார்.


2011 ஆம் ஆண்டில் தெற்கு சூடான் சூடானில் இருந்து பிரிந்த போது சூடானின் எண்ணெய் வயல்களில் முக்கால் வாசிப் பகுதி தெற்கு சூடானுக்கு வந்தது. இதனால் சூடானுக்கு எண்ணெய் உற்பத்தியில் பல கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டிருந்தது. இன்றைய உடன்பாட்டை அடுத்து தெற்கு சூடான் இந்த இழப்பை ஈடு செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


அமெரிக்க அரசுச் செயலர் இலறி கிளிண்டன் தெற்கு சூடான் தலைநகர் சூபாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட சில மணி நேரத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. இரு நாடுகளும் இச்சர்ச்சை தொடர்பாக தமக்கிடையே உடன்பாட்டை எட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் கடந்த வியாழன் வரை தவணை கொடுத்திருந்தது.


மூலம் தொகு