எட்வர்ட் சினோடனுக்கு உருசியா அரசியல் புகலிடம் வழங்கியது

வெள்ளி, ஆகத்து 2, 2013

அமெரிக்க உளவுத்துறையின் இரகசியங்களைக் கசிய விட்டமைக்காக அமெரிக்காவினால் தேடப்பட்டு வரும் முன்னாள் சிஐஏ ஊழியர் எட்வர்ட் சினோடனுக்கு உருசியா ஓராண்டு கால தற்காலிக வதிவிட உரிமையை வழங்கியுள்ளது. இதனை அடுத்து அவர் மாஸ்கோ செரமெத்தியேவோ விமான நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.


எட்வர்ட் சினோடன்

சூன் 23 ஆம் நாள் எட்வர்ட் சினோடன் ஹொங்கொங்கில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோ வந்து சேர்ந்தார். ஆனாலும், இவரிடம் முறையான நுழைவானை ஏதும் இல்லாததால் இவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார். இவரது அரசியல் தஞ்சக் கோரிக்கைகளைப் பல உலக நாடுகள் நிராகரித்து விட்ட நிலையிலேயே உருசியா தற்காலிக நுழைவாணையை வழங்கியுள்ளது. நேற்று மாலை 3:30 மணிக்கு இவர் பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு வாடகைக் கார் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டார். இவர் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளார் போன்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.


இதற்கிடையில் கிரெம்ளினின் ஆலோசகர் யூரி உசக்கோவிற்கும் உருசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் மைக்கேல் மெக்ஃபோலிற்கும் இடையில் சினோடன் தொடர்பாகப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ரியாநோவஸ்தி செய்தி வெளியிட்டுள்ளது.


பூட்டினின் உருசியாவுடனான உறவுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என அமெரிக்க செனட்டர் ஜோன் மெக்கெயின் ஒபாமா நிருவாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார். சினோடனுக்கு நுழைவாணை வழங்கியதன் மூலம் உருசியா அமெரிக்காவை சீண்டிப் பார்த்துள்ளது என ஜோன் மெக்கெயின் கூறியுள்ளார்.


மூலம் தொகு