உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானம் போயிங் 787 ட்ரீம்லைனர் பயணிகளுடன் வானில் பறந்தது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வியாழன், அக்டோபர் 27, 2011

உலகின் மிகவும் இலகுரக பயணிகள் விமானமான போயிங் 787 ட்ரீம்லைனர், நேற்று முதன் முறையாக பயணிகளுடன் டோக்கியோவிலிருந்து ஹொங்கொங்கிற்கு பறந்தது. "உலகின் முதல் பிளாஸ்டிக் ஜெட்" எனக் கூறப்படும் இந்த விமானத்தின் நிர்மாணப் பொருட்களில் சுமார் அரைப்பகுதி, கரிம இழைகள் மற்றும் பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம், எரிபொருளை பயன்படுத்துவதில் மிகவும் சிக்கனமானது என்றும் கூறப்படுகிறது


போயிங் 7878 டிரீம்லைனர்

அமெரிக்காவின் போயிங் விமானத் தயாரிப்பு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இவ்விமானம் 264 இருக்கைகள் மற்றும் இரண்டு இயந்திரங்கள் கொண்டது. சப்பானின் ஆல் நிப்போன் ஏர்லைன்சு விமான நிறுவனம் இதனை முதன் முறையாக இயக்கியது.


நேற்றைய முதல் பயணத்தில், முதல் வகுப்பு இருக்கைகள் ஆறு சுமார் 34,000 டாலர்களுக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இந்த ஏலத்தால் கிடைத்த தொகையை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்கொடையாகத் தரப்போவதாக நிப்போன் ஏர்லைன் கூறியிருக்கிறது. டிரீம்லைனரின் வழமையான சேவைகள் நவம்பர் மாதத்தில் தொடங்கும் என அல்ல் நிப்பான் நிறுவனம் அறிவித்துள்ளது.


டிரீம்லைனர் விமானம் 2008 ஆம் ஆண்டில் சப்பானிடம் கையளிக்கப்பட வேண்டியிருந்தது. ஆனால் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இதனைத் தாமதப்படுத்தியிருந்தன. கடந்த சனவரியில் இடம்பெற்ற ஒரு சோதனைப் பறப்பின் போது விமானத்தில் தீ பரவியதாக அறிவிக்கப்பட்டது.


ட்ரீம்லைனர், அதே அளவு திறனுள்ள பிற ஜெட் விமானங்களை விட அதிக தூரம் பயணிக்கும் என்றும் கருதப்படுகிறது. இந்த விமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் இயந்திரங்கள் உட்பட சுமார் கால் பகுதி பொருட்கள், பிரித்தானியாவிலும், ஏனையவை அமெரிக்காவிலும் தயாரிக்கப்பட்டுள்ளன.


இந்த விமானத்தின் சாளரங்கள் சற்றுப் பெரிதாக இருக்கும், காற்றின் தரமும், உள்ளே வெளிச்சமும் மேம்பட்டதாக இருக்கும் என்று போயிங் கூறுகிறது. இந்த விமானத்தை பரீட்சார்த்த முறையில் பறக்கவிட்டதன் அடிப்படையில், அது 20 சதவீதம் குறைவான அளவில் எரிபொருளை பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.


இதற்கிடையே, பிரெஞ்சு விமான தயாரிப்பு நிறுவனமான, ஏர்பஸ் நிறுவனமும் இதே போன்ற ஓர் இலகு ரக விமானத்தை தயாரித்து வருகிறது. இதன் இறக்கையும் பிற வேறு பொருட்களும் பிரித்தானியாவில் தயாரிக்கபட்டுவருகின்றன. இந்த விமானம் அடுத்த ஆண்டு பரீட்சிக்கப்படும் என்று ஏர்பஸ் நம்புகிறது.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு