உருசியாவைத் தாக்கிய எரிவிண்மீனின் பகுதிகள் மீட்பு

திங்கள், பெப்பிரவரி 18, 2013

கடந்த வெள்ளியன்று உருசியாவின் ஊரல் பகுதியில் வீழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திய எரிவிண்மீனின் உடைந்த துண்டுகள் சிலவற்றை உருசிய அறிவியலாளர்கள் மீட்டுள்ளனர். செல்யாபின்ஸ்க் பிராந்தியத்தின் உறைந்த செபார்க்குல் ஏரியில் இருந்து இவை மீட்கப்பட்டுள்ளன.


எரிவிண்மீனின் தாக்கத்தில் ஏறத்தாழ 1,200 பேர் வரையில் காயமடைந்தனர். ஒரு பில்லியன் ரூபிள்கள் ($33மில்) வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக உருசிய அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டடங்கள் பலவற்றின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியதிலேயே பெரும்பாலானோர் காயமடைந்தனர். கிட்டத்தட்ட 9,000 பேர் வரையில் துப்பரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


“நாம் இப்போது தான் நமது ஆய்வை முடித்துள்ளோம். செபார்க்குல் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட துண்டுகள் எரிவிண்மீனின் சிதைவுகளே என நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்," என ஊரல் நடுவண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விக்டர் கிரகோவ்ஸ்கி கூறியுள்ளார்.


"இந்த எரிவிண்மீன் ஒரு சாதாரண வேதி எரிகல் (chondrite) ஆகும். இது ஒரு பாறைகளினால் ஆன எரிவிண்மீன், இது சுமார் 10 விழுக்காடு இரும்பைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் இவ்வெரிவிண்மீனுக்கு செபார்க்குல் எரிவிண்மீன் எனப் பெயரிடப்படலாம்," என கிரகோவ்ஸ்கி கூறினார். செபர்க்குல் ஏரியில் ஆறு மூட்டர் அகலத்தில் பெரும் குழியொன்று ஏற்பட்டுள்ளது.


இந்த எரிவிண்மீன் புவியின் வளிமண்டலத்துள் நுழைவதற்கு சற்று முன்னர் அதன் எடை 10 தொன்களாக இருந்திருக்கலாம் எனவும், வினாடிக்கு 30 கிமீ வேகத்தில் சென்றுள்ள இந்த விண்மீன் தரையில் இருந்து 30 முதல் 50 கிமீ உயரத்தில் வெடித்துச் சிதறியிருக்கலாம் என உருசிய அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.


ஆனாலும், அமெரிக்காவின் நாசா நிறுவனம் இதன் எடையை 10,000 தொன்கள் எனவும், அகலம் 17 மீட்டர் எனவும் கணித்துள்ளது. அத்துடன் 500 கிலோதொன்கள் ஆற்றலை அது வெளியிட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. ஹிரோசிமாவில் வீசப்பட்ட அணுகுண்டின் ஆற்றல் 12-15 கிலோதொன்கள் ஆகும்.


இவ்வாறான எரிவெள்ளிகள் பூமியில் வீழ்வது மிக அபூர்வமான நிகழ்வாகும். 1908 ஆம் ஆண்டில் சைபீரியாவில் இவ்வாறான எரிவெள்ளி வீழ்ந்ததில் 2,000 சதுர கிமீ பரப்பளவு நிலம் சேதமுற்றது.


மூலம் தொகு