உருசியாவின் வோல்ககிராத் நகரில் இரட்டைக் குண்டுவெடிப்பு, 31 பேர் உயிரிழப்பு

திங்கள், திசம்பர் 30, 2013

உருசியாவின் வோல்ககிராத் நகரில் இன்று திங்கட்கிழமை மின்சாரப் பேருந்து ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பு ஒன்றில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், 28 பேர் காயமடைந்தனர். வோல்ககிராத் நகரில் 24 மணி நேரத்திற்குள் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும். நேற்று திடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மற்றொரு தற்கொலைக் குண்டுவெடிப்பில் 17 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்தனர்.


இன்றைய குண்டுவெடிப்பில் 6 மாதக் குழந்தை உட்பட காயமடைந்த பலர் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ட்ரொலிபஸ் என்றழைக்கப்படும் இந்த மின்சாரப் பேருந்து மக்கள் நடமாட்டம் அதிகமான இடம் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த போதே குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த வெடிப்பில், பேருந்து முழுவதுமாக சேதமடைந்தது.


இரு தாக்குதல்களையும் நடத்திய ஆண் தற்கொலைதாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத்துறை அதிகாரி விளாதிமிர் மார்க்கின் தெரிவித்தார்.


இன்று நடந்த தாக்குதல் கடந்த இரண்டு மாதங்களில் வோல்ககிராத் நகரில் இடம்பெற்ற மூன்றாவது தற்கொலைத் தாக்குதல் ஆகும். அக்டோபரில் நடைபெற்ற முதலாவது தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


உருசியாவின் கருங்கடல் நகரான சோச்சியில் பெப்ரவரி 7 இல் 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவிருப்பதால், தீவிரவாதிகள் தமது தாக்குதல்களை அதிகரிக்கக்கூடும் என அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசுத்தலைவர் விளாதிமிர் பூட்டின் உத்தரவிட்டுள்ளார். பல நாட்டுத் தலைவர்களும் இத்தாக்குதல்களைக் கண்டித்து அறிக்கை விடுத்துள்ளனர்.


தாக்குதல்களில் உயிரிழந்த ஒவ்வொருவர் குடும்பத்தினருக்கும் 1 மில்லியன் ரூபிள்கள் ($305,000) நட்டைஇடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தோர் 200,000 முதல் 400,000 ரூபிள்கள் வரை பெறுவர்.


ஸ்டாலின்கிராத் என முன்னர் அழைக்கப்பட்ட வோல்ககிராத் நகரம் சோச்சி நகரில் இருந்து 690 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை பியாத்திகோர்ஸ்க் என்ற நகரில் கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம் தொகு