உருசியாவின் தூரகிழக்கில் பயணிகள் விமானம் வீழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, செப்டெம்பர் 14, 2012

உருசியாவின் தூர-கிழக்கு கம்சாத்கா பிரதேசத்தில் பயணிகள் விமானம் ஒன்று புதன்கிழமை அன்று வீழ்ந்ததில் 10 பேர் கொல்லப்பட்டனர்.


உருசியாவில் கம்சாத்கா பிரதேசத்தின் அமைவிடம்

இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட அண்டோனொவ்-28 ரக விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானது. இரண்டு குழந்தைகள் உட்பட 12 பயணிகளுடனும், இரண்டு விமானிகளுடனும் கம்சாத்கா பிரதேசத்தின் தலைநகர் பெத்ரோபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி நகரில் இருந்து புறப்பட்ட இவ்விமானம் 990 கிமீ தூரத்தில் உள்ள பலானா என்ற கிராமத்தின் விமான இறங்கு துறை ஒன்றில் தரையிறங்குகையில் விபத்துக்குள்ளானது.


விமானத்தில் ஏற்பட்ட கோளாறினால் பலானாவில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள காட்டுப் பகுதி ஒன்றில் விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்படுகையிலேயே விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.


விமானத்தின் பின்பக்கத்தில் அமர்ந்திருந்த நால்வருமே உயிர்தப்பியவர்கள் ஆவர். உயிர் தப்பியவர்களில் ஒருவரான விளாதிமிர் சபால்க்கொவ் கருத்துத் தெரிவிக்கையில், தாம் நால்வரும் விமானம் தரையில் மோதுவதற்குச் சற்று முன்பாக வெளியே வீசப்பட்டதனால் காயங்களுடன் தப்பியதாகத் தெரிவித்தார்.


இதற்கிடையில், விபத்துக்குள்ளான விமானத்தின் பதிவுப் பெட்டி மீட்புப் பணியாளர்களால் இன்று கண்டுபிடிக்கப்பட்டது.


மூலம்

தொகு