உதயன் பத்திரிகை ஆசிரியர் குகநாதன் தாக்கப்பட்டார்
சனி, சூலை 30, 2011
- 17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
- 25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- 7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- 24 செப்டெம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் நாளிதழின் பிரதம ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் (வயது 61) நேற்றிரவு இனந்தெரியாதோர்களால் தாக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாண மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தை அடுத்து உதயன் அலுவலகத்தை சூழவுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது.
நேற்று மாலை 7.30 மணியளவில் வழமை போல் அலுவலகத்தில் இருந்து தனது இல்லத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது நாவலர் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த காடையர்களால் இரும்புக் கம்பிகளினால் பின்புறமாகத் தாக்கப்பட்டுப் படுகாயம் அடைந்தார். தாக்குதலுக்கு உள்ளாகி இரத்தம் கொட்டிய நிலையிலும் ஒருவாறு அருகில் இருந்த தனது வீட்டுக்குள் ஓடிச் சென்ற குகநாதன் பத்திரிகை அலுவலகத்துக்கு தகவல் தந்ததையடுத்து அங்கிருந்து சென்றவர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றனர்.
இரண்டு நபர்கள் இரும்புக் கம்பியினால் அவரைத் தாக்கிவிட்டு ஓடிச் சென்று மோட்டார் சைக்கிளில் ஏறித் தப்பிச் சென்றனர் என்று வீதியில் சைக்கிளில் வந்த ஒருவர் விவரித்தார். இரண்டு பேர் அரை மணி நேரத்துக்கும் அதிகமாக அந்த இடத்தில் தரித்து நின்றனர் என்று செய்தி ஆசிரியரின் அயலவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் உள்ளூராட்சி சபைகளுக்காக நடைபெற்ற தேர்தல்களில் படுதோல்வியடைந்தவர்கள் அந்த தோல்வியை சகிக்க முடியாமலே உதயன் பத்திரிகையின் பிரதம செய்தியாசிரியர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என உதயன், சுடரொளி நிறுவனத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணபவன் தெரிவித்துள்ளார். "நாவலர் வீதிச் சந்தியில் இராணுவக் காவலரண் இருக்கும் இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்துக்குள்ளேயே இச்சம்பம் இடம்பெற்றுள்ளது. தேர்தல் காலங்களிலும் எனக்கும் உதயன் ஆசிரிய பீடத்திற்கும் பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன. இது தொடர்பாக காவல்துறையினரிடம் முறையிட்டிருந்ததோடு எமக்கு பாதுகாப்பினை அதிகரிக்குமாறும் வேண்டியிருந்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை," என்றார் திரு. சரவணபவன்.
கடந்த மே 28 இல் உதயன் பத்திரிகையின் செய்தியாளர் கவிதரன் என்பவர் தனது அலுவலகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் ஐந்து நபர்களைக் கொண்ட குழுவொன்றினால் கடுமையாகத் தாக்கப்பட்டார். 2006 மே 3 இல் உதயன் காரியாலயத்திற்குள் புகுந்த காடையர்கள் "குகநாதன் எங்கே.." என்று கேட்டு உள்நுழைந்து இருவரை சுட்டுக் கொன்றிருந்தனர். அன்று காரியாலயத்தில் குகநாதன் இல்லாதமையால் உயிர் தப்பியிருந்தார்.
தொடர்புள்ள செய்திகள்
தொகு- உதயன் பத்திரிகையாளர் மீது யாழ்ப்பாணத்தில் தாக்குதல், மே 28, 2011
மூலம்
தொகு- உதயன் பிரதம செய்தி ஆசிரியர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல், தமிழ்மிரர், சூலை 30, 2011
- தோல்வியை சகிக்கமுடியாதவர்களின் சதியே செய்தியாசிரியர் மீதான தாக்குதல்: சரவணபவன் எம்.பி., தமிழ்மிரர், சூலை 30, 2011
- Uthayan news editor assaulted, டெய்லிமிரர், சூலை 30, 2011