உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வர நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை என இலங்கை தெரிவிப்பு

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஏப்பிரல் 22, 2011

இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போர் தொடர்பாக ஐ.நா. செயலாளருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட நிபுணர் குழு அதிகார வரம்பு மீறிச் செயற்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ. நா. செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை வெளியுறவுத்துறை அமைச்சில் நடைபெற்றது.


ஐ.நா. செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கை கடந்த 12 ஆம் திகதி நியூயோர்க்கில் உள்ள இலங்கைப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டது. "இது ஐ. நா. வினால் நியமிக்கப்பட்ட குழுவாக குறிப்பிடுவது தவறாகும். தனக்கு ஆலோசனை வழங்க மட்டுமே இந்தக் குழு நியமிக்கப்பட்டதாக ஐ. நா. செயலாளர் தெளிவாக கூறியுள்ளார். இதற்கு விசாரணை நடத்த அதிகாரம் கிடையாது. குற்றச் சாட்டுகள் குறித்து விசாரிக்கவோ இதன் உண்மைத் தன்மை குறித்து முடிவுக்கு வரவோ நிபுணர் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் தமது அதிகார எல்லையை மீறி இந்தக் குழு செயற்பட்டுள்ளது. இந்தக் குழு ஐ. நா. குழுவோ, உத்தியோகபூர்வ அதிகாரமுள்ள குழுவோ அல்ல," என வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


ஐநா இந்த அறிக்கையை வெளியிடவோ அல்லது அதிலுள்ள சிபாரிசுகளை நடைமுறைப்படுத்தவோ முனையக்கூடாது எனக் குறிப்பிட்டார். நாட்டில் நல்லிணக்க முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய இந்த தருணத்தில், அந்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாகவே நிபுணர் குழு அறிக்கை அமைந்திருக்கும் என்பது இலங்கை வெளியுறவு அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸின் வாதம். அத்தோடு இந்த அறிக்கை ஐநாவின் கட்டமைப்புக்கும் பெரும் சேதத்தையே ஏற்படுத்தும் என்றும் ஊடகவியலாளர்களிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறினார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பெருமளவு உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.


மூலம்

தொகு