ஈழத்தமிழருக்கு வெள்ளை மாளிகையின் 'மாற்றத்திற்கான சாதனையாளர்' விருது

வெள்ளி, மே 31, 2013

அமெரிக்காவில் வெள்ளை மாளிகையினால் வழங்கப்படும் மாற்றத்திற்கான சாதனையாளர் (Champion of Change) உயர் விருது அமெரிக்காவில் வாழும் ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் என்பவருக்குக் கிடைத்துள்ளது. வெள்ளை மாளிகையில் இந்த விருது வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.


புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வேற்று நாட்டவர்களில் முன்னோடியான கண்டுபிடிப்புக்களுக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டு வருகிறது. 11 பேருக்கு இவ்விருது வழங்கப்பட்டது. ”அமெரிக்காவில் வேலை வாய்ப்பைப் பெற்றுக் கொடுப்பதற்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உழைக்கும் புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வாழும் வெளிநாட்டவர்களில் சிறந்தவர்களையும், அறிவுசாலிகளையும் கௌரவிக்க இவ்விருது வழங்கப்படுகிறது,” வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறுகிறது.


யாழ்ப்பாணம் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பேராசிரியர் சிவானந்தன் யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். 1980 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் சிறப்புப் பட்டம் பெற்று சிகாகோ இலினோய் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். இலினோய் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் இயற்பியலில் பல கண்டுபிடிப்புக்களை வெளியிட்டுள்ளதுடன், பல ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். மெர்க்குரி-காட்மியம்-தெலுரைடு (MCT) என்னும் சேர்மப்பொருள் குறைக்கடத்தித் துறையில் வல்லவர். அகச்சிவப்புக் கதிரை மின்னாற்றலாக மாற்றவல்லது இத்தொழில்நுட்பம். அகச்சிவப்புக் கதிர் என்பது கண்ணுக்குத் தெரியாத வெபபம் போன்ற மின்காந்த அலைகள் அடங்கியவை. இரவில் மனிதர்களின் அல்லது கருவிகளின் வெப்பத்தை மட்டும் கொண்டு காட்சிப்படுத்திக் காட்டும் குறைக்கடத்திக்கருவிகளின் துறை.


இவர் "சிவானந்தன் ஆய்வு மையம்" என்ற இயற்பியல் ஆய்வு கூடத்தை நிறுவி அதனூடாக பல ஆய்வு நடவடிக்கைகளுக்கு உதவி வருவதுடன், இலாப நோக்கற்ற பல ஆய்வு உதவிகளையும் மேற்கொண்டிருக்கிறார். இவரது உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இயற்பியல் துறையினரும் கூட்டு ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.


மூலம் தொகு