ஈரானில் நடந்த குண்டு வெடிப்பில் அணுவியல் விஞ்ஞானி உயிரிழந்தார்

வியாழன், சனவரி 12, 2012

ஈரானில் இடம்பெற்ற கார்க்குண்டு வெடிப்பு ஒன்றில் அந்நாட்டின் அணு விஞ்ஞானி முஸ்தபா அகமதி ரோசன் என்பவர் கொல்லப்பட்டார். இத்தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். ஈரான் நாட்டின் அணுசக்தி திட்டத்துக்கு எதிராகவே இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கருதப்படுகின்றது. இத்தாக்குதலுக்கு அமெரிக்கா தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது.


அகமதி ரோசன் யுரேனிய செறிவூட்டு மையத்தில் துணை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். தெகரான் பல்கலைக்கழகத்துக்கு வெளியே நேற்று புதன்கிழமை இத்தாக்குதல் நடந்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இரு சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் காந்தத்தால் ஆன வெடிகுண்டைக் காரில் வைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் ஈரான் நாட்டு விஞ்ஞானிகள் மூவர் இதே போன்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் அணு விஞ்ஞானிகள். இதே தேதியில் 2010 ஆம் ஆண்டில் நடந்த குண்டு வெடிப்பில் இயற்பியலாளர் மசூத் அலி மொகமதி என்பவர் கொல்லப்பட்டார். அமெரிக்காவும் இசுரேலுமே இத்தாக்குதல்களுக்குக் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.


இத்தாக்குதலுக்கு ஈரான் நாடாளுமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற தாக்குதல்கள் ஈரான் நாட்டு வளர்ச்சியை ஒருபோதும் பாதிக்காது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.


தொடர்புள்ள செய்திகள் தொகு

மூலம் தொகு