இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க மத்திய அரசுக்கு ஜெயலலிதா முன்மொழிவு

புதன், சூன் 8, 2011

இலங்கை மீது பொருண்மியத் தடை விதிக்க வேண்டும் என்று நடுவண் அரசை வலியுறுத்தி, இன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை முதல்வர் ஜெயலலிதா முன்மொழிந்தார்.


தமிழர்களைத் தாக்கிய இலங்கை ஒரு போர்க்குற்றவாளி. அந்த நாட்டை வழிக்குக் கொண்டு பொருளாதார தடை விதிப்பதே ஒரே வழியாகும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இலங்கையில் சம உரிமைக்காக போராடி வரும் தமிழர்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டது. பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள், மருத்துவமனைகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. இலங்கை அரசு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐநா சபை பொதுச்செயலரால் நியமனம் செய்யப்பட்ட குழு கண்டறிந்துள்ளது. இந்திய அரசு போர்க் குற்றம் புரிந்தவர்களை, போர்க் குற்றவாளிகள் என்று பிரகடனப்படுத்த வேண்டும், இதற்கு ஐ.நா. சபையை வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம். மேலும், சிங்களர்களுக்கு இணையாக, தமிழர்களுக்கு அனைத்து குடியுரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இந்திய அரசும், இன்னும் சில நாடுகளும் இணைந்து, இலங்கை அரசின்மீது ஒரு பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால், குறுகிய காலத்திற்குள்ளேயே நாம் சொல்வதை இலங்கை அரசு கேட்டுத்தான் ஆக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்படும். இதற்காக, இலங்கை அரசின் மீது மற்ற நாடுகளுடன் இணைந்து பொருளாதாரத் தடையை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசை தமிழக சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு ஜெயலலிதா தனது உரையில் குறிப்பிட்டார்.


இத்தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டு பேசினர். முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானத்திற்கு திமுக இன்று ஆதரவு தெரிவித்தது.


இந்த தீர்மானம் மீது நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு திமுக சார்பில் துரைமுருகன் பேசினார். முதல்வரின் பதில் உரைக்கு பின்னர் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது.


மூலம் தொகு