இலங்கை அரசுத்தலைவரின் இந்தியப் பயணம்: தமிழகத்தில் எதிர்ப்புப் போராட்டங்கள்

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, பெப்பிரவரி 8, 2013

இலங்கையின் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் இந்தியப் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று தமிழகத்தில் பரவலாக போராட்டங்கள் நடந்துள்ளன. வீடுகளில் கறுப்புக் கொடியினை ஏற்றுதல், தொடர்வண்டியை மறித்தல், வழக்குரைஞர்களின் நீதிமன்றப் புறக்கணிப்பு, உருவ பொம்மை எரிப்பு என பலதரப்பட்ட போராட்டங்கள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்னையில்

மைய தொடர்வண்டி நிலையத்திலும், தாம்பரம் தொடர்வண்டி நிலையத்திலும் ‘தொடர்வண்டி மறியல்’ போராட்டத்தை இன்று 'நாம் தமிழர்' கட்சியினர் நடத்தினர். கொருக்குப்பேட்டையில் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ கட்சியினர் மின்சாரத் தொடர்வண்டியை மறித்து போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினத்தில்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், வீடுகளில் கறுப்பு நிறக் கொடிகளை ஏற்றி தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

உடுமலைப்பேட்டையில்

உருவபொம்மையை தீ வைத்துக் கொளுத்திய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 65 பேரை காவல்துறை கைது செய்தது. உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள கணியூர் எனுமிடத்தில் உருவபொம்மையை தீ வைத்துக் கொளுத்திய இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 6 பேர், காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.



மூலம்

தொகு