இலங்கையில் போர்க்காலச் சம்பவங்கள் பற்றி ஆராய இராணுவ நீதிமன்றம் அமைப்பு

வியாழன், பெப்பிரவரி 16, 2012

இலங்கையில் நான்காம் ஈழப்போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் பற்றி ஆராய்ந்த படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கை இராணுவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களை விரிவாக ஆராயவென இராணுவ நீதிமன்றமொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கிளிநொச்சி பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் சுதந்த டி சில்வா தலைமையில் ஐந்து இராணுவ உயர் அதிகாரிகள் இந்த நீதிமன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.


நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த டிசம்பர் மாத இறுதியில் அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து, அதனை நாடாளுமன்றத்திடம் ராஜபக்ச முன்வைத்தார். கடந்த சனவரி மாத ஆரம்பத்திலேயே இந்த இராணுவ விசாரணை மன்றம் நியமிக்கப்பட்டுவிட்டதாகவும் இந்த விசாரணையின் போது, இராணுவ வீரர் ஒருவர் போர்க்குற்றம் புரிந்துள்ளார் என்று கண்டறியப்பட்டால், அதற்கான ஆதாரங்கள் கிடைத்தால் இராணுவச் சட்டக்கோவையின் படி ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவைப்பட்டால் இராணுவ நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சனல் 4 தொலைக்காட்சி நிறுவனத்தால் வெளியிடப்பட்ட வீடியோ காட்சி மற்றும் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் இராணுவ விசாரணை மன்றம் ஆராயும் என்றும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.


இதற்கிடையில், போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பன்னாட்டு விசாரணைகளைத் திசை திருப்பவே இராணுவ நீதிமன்றத்தினை இலங்கை நியமித்துள்ளதாக, நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படுவதற்குச் சாத்தியமுள்ள சூழலில், மற்றொரு அர்த்தமற்ற நகர்வை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. என்று மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார். அத்துடன் அரசுக்கு ஆதரவான உறுப்பினர்களைக் கொண்ட விசாரணைக் குழுக்களை நியமிக்கும் நீண்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மூலம் தொகு