இலங்கைப் பிரச்சினை: தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு குமுகாய அமைப்புகள் ஆதரவு

This is the stable version, checked on 23 சூலை 2018. Template changes await review.

செவ்வாய், மார்ச்சு 19, 2013

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் நடத்திவரும் போராட்டங்களுக்கு குமுகாயத்தின் இன்ன பிற அமைப்புகள் தமது ஆதரவினை தெரிவித்து வருகின்றன. போராடும் மாணவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் ‘ஒருநாள் அடையாளப் போராட்டங்கள்’ நடத்திட சில வணிக மற்றும் திரைப்படத்தொழில் அமைப்புகள் முன்வந்துள்ளன.


ஆசியக் கண்டத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான சென்னையிலுள்ள 'கோயம்பேடு சந்தை' நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணிவரை செயல்படாது என அங்கு இயங்கிவரும் வணிகச் சங்கம் தெரிவித்துள்ளது. ஏறத்தாழ 3000 கடைகள் வரை அங்கிருக்கின்றன; அவை அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சந்தைக்கு காய்கறி, கனிகள் மற்றும் மலர்களைக் கொண்டுவரும் சுமார் 700 லாரிகள், மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டதாகத் தெரிகிறது. 'முழக்கப் போராட்டம்' ஒன்றும் சந்தையில் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்-நடிகையர் மற்றும் தொலைக்காட்சி தொழில் வல்லுனர்கள் பங்குபெறும் 'ஒருநாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம்' சென்னையில் இன்று நடைபெறுகிறது.


சட்டம் பயிலும் மாணவர்கள் மற்றும் கலை, அறிவியல் பாடம் கற்கும் மாணவர்கள் மட்டுமே இதுகாறும் போராட்டங்களை நடத்தி வந்தனர். தற்போது கடந்த சனிக்கிழமை முதல், போராட்டங்களில் கலந்துகொள்ள தொழிற்நுட்பக் கல்லூரி மாணவர்களும் முன்வந்துள்ளனர். மருத்துவக்கல்லூரி மாணவர்கள் நேற்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


முன்னதாக கடந்த ஞாயிறன்று சென்னையிலுள்ள ஐஐடி கல்வியகத்தைச் சேர்ந்த 69 மாணவர்கள், 'ஒருநாள் அடையாள உண்ணாநிலை' மேற்கொண்டனர். அன்று மாலையில் மேலும் 100 மாணவர்கள் இவர்களுடன் இணைந்து ஊர்வலமாக சென்றனர். பொதுவாக போராட்டங்கள் எதிலும் கலந்துகொள்ளாத ஐஐடி கல்வியக மாணவர்களின் இச்செயல்பாடு, அரசியல் பகுத்தாய்வாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஏழு மொழிகளில் எழுதப்பட்டிருந்த பதாகைகளை அந்த மாணவர்கள் ஏந்திச் சென்றனர். வகுப்பு நடைபெறுவதற்கு ஊறுவிளைவிக்காமல் தங்களின் போராட்டம் இருக்குமென்றும், தங்களால் முடிந்த அளவிற்கு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவோம் என்றும் அந்த மாணவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.


மூலம்

தொகு