இயேசுநாதர் காலத்து வீடு இசுரேலில் கண்டுபிடிப்பு

வியாழன், திசம்பர் 24, 2009


இயேசுநாதர் வாழ்ந்த காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும் மிகத் தொன்மையான வீடு ஒன்றை இசுரேலின் தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். கிமு 100 - கிபி 100ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவ்வீடு கட்டப்பட்டதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.


இசுரேலின் நாசரேத் நகருக்கு வெளியே ஒரு தேவாலயத்திற்கு அருகில் இந்த வீடு உள்ளது. அந்த இடத்தில் மொத்தம் 50 வீடுகள் உள்ளன. கிட்டத்தட்ட நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் இந்த வீடுகள் உள்ளன. இந்த வீடுகள்தான் நாசரேத் நகரின் முதல் குடியிருப்பாக கருதப்படுகிறது. நாசரேத்தில்தான் இயேசுநாதர் தனது பால பருவத்தைக் கழித்ததாக புதிய ஏற்பாடு தெரிவிக்கிறது. அவற்றை முழுமையாக வெளிக் கொணரும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.


"இந்த வீடுகள் உள்ள இடத்தைச் சுற்றிலும் கல்லறைகள் உள்ளன. இப்பகுதியில் யூதர்கள் நிறைந்திருந்தனர்" என்று தொல்பொருள் ஆய்வாளர் யார்தேனா அலெக்சான்ட்ரே கூறியுள்ளார்.


இங்குள்ள வீடுகள் சுண்ணாம்பு மற்றும் களிமண்ணால் கட்டப்பட்டுள்ளன. ஒரு சாதாரண யூதக் குடும்பம் வசித்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.


தற்போது வீட்டின் நுழைவாயில் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வீட்டின் சுவரை பாதிக்கப்படாத வகையில் தோண்டி எடுக்கும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இயேசுநாதர் பாலஸ்தீனத்தில் உள்ள பெத்லகேமில் பிறந்தவர். ஆனால் பின்னாளில் இயேசுவின் பெற்றோரான ஜோசப்பும், மேரியும் நாசரேத்துக்கு இடம் பெயர்ந்தனர். நாசரேத்தில்தான் இயேசு தனது பால பருவத்தைக் கழித்தார் என்று விவிலியம் கூறுகிறது.


புதிய கண்டுபிடிப்பு குறித்து யார்தேனா மேலும் கூறுகையில், இந்த இடம் இயேசுநாதர் நடமாடிய இடமாக இருக்கலாம். அவரும், அவரது நண்பர்களும், உறவினர்களும் ஓடியாடிய விளையாடிய இடமாக இது இருக்கலாம் என்றார்.


இந்த வீட்டு வளாகப் பகுதியில் ஒரு மறைவிடமும் உள்ளது. இது யூதப் புரட்சியாளர்களிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ள கட்டப்பட்ட மறைவிடமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த மறைவிடத்தில் ஆறு பேர் சில மணி நேரங்களுக்கு பதுங்கிக் கொள்ளலாம்.


நாசரேத்தில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய அளவில் மக்கள் தொகை இல்லை. மிக மிக குறைந்த அளவிலான மக்களே இருந்தபடியால் இந்த குடியிருப்பைத் தவிர நகரில் வேறு எந்த இயேசு காலத்து குடியிருப்பும் இருக்க வாய்ப்பில்லை என்று கருதப்படுகிறது. எனவே இந்த குடியிருப்பில்தான் இயேசுநாதர் வாழ்ந்திருக்க வேண்டும் என உறுதியாக நம்பப்படுகிறது.

மூலம்

தொகு