இயந்திரக் கோளாறால் மாஸ்கோவில் விமானம் வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு

ஞாயிறு, திசம்பர் 5, 2010

பயணிகள் விமானம் ஒன்று மாஸ்கோவின் விமான நிலையத்தில் அவரசம் அவசரமாகத் தரையிறங்கியதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும், 80 பேர் காயமடைந்ததாகவும் இரசிய அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவின் தமதேதோவா விமான நிலையத்தில் இவ்விமானம் தரையிறங்கியபோது அதன் மூன்று இயந்திரங்களும் செயலிழந்து போயின.


தமதேதோவா விமான நிலையத்தில் து-154 விமானம்

இரசியத் தயாரிப்பான து-154 (TU-154) ரக விமானம் மாஸ்கோவில் இருந்து 150 பயணிகளுடன் தெற்கு ரசிய மாநிலமான தாகெத்தான் நோக்கிப் பயணித்தது. விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையை விட்டு விலகி இரண்டாகப் பிளந்தது.


மாஸ்கோவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி இயந்திரக் கோளாறு இருப்பதாக அறிவித்தார். இதனை அடுத்து அது தமதேதோவா விமான நிலையத்தில் தரையிறங்கியது.


உருசியாவின் தேசிய விமான நிறுவனமான ஏரோஃபுளொட் கடந்த சனவரி மாதத்தில் தன்னிடம் இருந்த 23 து-154 ரக விமானங்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக சேவையில் இருந்து நிறுத்தி வைத்திருந்தது.


தூப்பொலெவ் ரகத்தின் மத்திய ரக விமானங்கள் அவற்றின் பெரும் சத்தம் காரணமாக அவை ஐரோப்பிய நகரங்களில் தரையிறங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் உள்ளூரிலும், முன்னாள் சோவியத் நாடுகளிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன.


இவ்வாண்டு ஆரம்பத்தில் போலந்து அரசுத்தலைவர் து-154 ரக விமானத்தில் பயணித்த போதே விபத்துக்குள்ளாகி இறந்தார்.


மூலம் தொகு