இந்தியா மூன்று செயற்கைக் கோள்களை விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவியது

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

புதன், ஏப்பிரல் 20, 2011

இந்தியாவின் மூன்று செயற்கைக் கோள்களை சுமந்து கொண்டு விண்கலம் ஒன்று விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் தயாரிப்பில் உருவான, பதினெட்டாவது பி.எஸ்.எல்.வி விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஏவிய சில நிமிடங்களில் திட்டமிட்டபடி செயற்கைக்கோள்கள் அதன் இலக்கை அடைந்தது. பூமியில் இருந்து 820 கிமீ உயரத்தில் செயற்கைக்கோள்களை விண்கலம் விடுவித்தது. அவை சரியான சுற்றுப்பாதையில் செல்வதாக இஸ்ரோ அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.


கடந்த திசம்பர் மாதத்தில் செயற்கைக் கோளைக் கொண்டு சென்ற பி.எஸ்.எல்.வி விண்கலம் ஏவப்பட்ட சில நிமிட நேரத்தில் வங்காள விரிகுடாவில் வீழ்ந்து வெடித்திருந்தது.


ஆந்திர மாநிலம், ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதலாம் ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை, சரியாக 10:12க்கு, பி.எஸ்.எல்.வி. சி16 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முந்தைய விண்கலங்களை விட, மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தெரிவித்துள்ளது.


இந்தியத் தயாரிப்பில் உருவான 1,206 கிலோ எடை கொண்ட, "ரிசோர்ஸ்சாட்-2' என்ற தொலையுணர்வுச் செயற்கைக்கோள் இன்று அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், பூமியின் இயற்கை வளத்தில் மனிதரால் ஏற்படும் பாதிப்புக் குறித்தும், சுற்றுச்சூழல், மற்றும் இயற்கை பேரழிவுகள் தொடர்பாகவும் ஆராய முடியும்.


இத்துடன் 92 கிலோ எடை கொண்ட, இந்திய - உருசியக் கூட்டு தயாரிப்பில் உருவான, "யூத்சாட்' என்ற சிறிய ரக செயற்கைக்கோளும், சிங்கப்பூர் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினால் உருவான 106 கிலோ எடை கொண்ட, "எக்ஸ்- சாட்' என்ற சிறிய ரகச் செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட்டன. இதில், யூத்சாட் செயற்கைக்கோள் கல்லூரி மாணவர்களுக்கு உதவும் வகையில், வான்வெளிக்கும், பூமி மண்டலத்திற்கும் உள்ள தொடர்பை ஆராயும் வகையில், நவீன தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.


பி.எஸ்.எல்.வி. விண்கலத்தில் இதுவரை 25 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும், 19 உள்நாட்டு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட்டுள்ளன.


தொடர்புள்ள செய்திகள்

தொகு

மூலம்

தொகு