இத்தாலிய பாலத்தீன ஆதரவாளர் காசாவில் கடத்தப்பட்டுப் படுகொலை

This is the stable version, checked on 22 சூலை 2018. Template changes await review.

வெள்ளி, ஏப்பிரல் 15, 2011

ஹமாஸ் ஆட்சியில் உள்ள காசாப் பகுதியில் பாலத்தீன ஆதரவாளரான இத்தாலியர் ஒருவர் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.


விட்டோரியோ அரிகோனி என்ற 36 அகவையுடைய இந்த நபர் நேற்று வியாழக்கிழமை அன்று ஹமாஸ் இயக்கத்துக்கு எதிரான ஒரு தீவிரவாதக் குழு ஒன்றினால் கடத்தப்பட்டார். தமது குழுவின் தலைவரை விடுவிக்குமாறு இக்குழு எச்சரிக்கை விடுத்திருந்தது. காசா நகர வீடு ஒன்றில் விட்டோரியோவின் உடல் தூக்கில் தொங்கியபடி இருக்கக் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.


இப்படுகொலையைக் கண்டித்திருக்கும் இத்தாலிய அரசு, ”காட்டுமிராண்டித்தனமான படுகொலை” என வர்ணித்துள்ளது.


2007 ஆம் ஆண்டில் பிபிசி செய்தியாளர் அலன் ஜோன்ஸ்டன் கடத்தப்பட்டதற்குப் பின்னர் முதற்தடவையாக வெளிநாட்டுக் குடிமகன் ஒருவர் காசாவில் கடத்தப்பட்ட்உள்ளார்.


ஹமாஸ் இயக்கம் மிதவாதப் போக்கைக் கொண்டதாகக் கருதும் சலாஃப் இசுலாமியத் தீவிரவாத இயக்கமே அரிகோனியைக் கடத்தியிருந்தது. தமது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் இன்று வெள்ளிக்கிழமை மாலைக்கு முன்னர் விட்டோரியோ கொலை செய்யப்படுவார் என அவர்கள் அறிவித்திருந்தனர். இவர்களது தலைவர் ஷேக் மக்டாசி சென்ற மாதம் ஹமாஸ் காவல்துறையினரால் காசாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். சலாஃப் இயக்கம் வெளியிட்டிருந்த காணொளியில் அரிகோனி கண்கள் கட்டப்பட்ட நிலையில் கடுமையான காயங்களுடன் இருக்கக் காணப்பட்டார். "ஊழலைப் பரப்புவதற்காக இத்தாலியக் குடிமகன் எமது நாட்டுக்குள் நுழைந்துள்ளார்” என காணொளியில் கூறப்பட்டது. அவர்களது காலக்கெடு முடிவதற்கு முன்பாகவே அவர் கொலை செய்யப்பட்டு விட்டார்.


பன்னாட்டு ஒருமைப்பாட்டு இயக்கத்தின் உறுப்பினரான அரிகோனி கடந்த பல ஆண்டுகளாக காசாவில் வசித்து வந்தார்.


மூலம்

தொகு